மத்திய அரசின் சலுகைகளுக்காக எம்முள் சில கறுப்பு ஆடுகள்! – சிறிதரன்

மத்திய அரசு வழங்கும் அற்ப பதவிகளுக்காக, கூட இருந்தே குழிபறித்து, அடுத்தவனை வீழ்த்த நினைக்கின்ற சில கறுப்பு ஆடுகள் இன்றைய சூழலில் காணப்படுகின்றமை மிகவும் வேதனையான ஒன்றென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நா.யோகேந்திரன் எழுதிய ‘நீந்திக் கடந்த நெருப்பாறு’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய சிறிதரன் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஒருபுறம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராடுகின்றனர். மறுபுறத்தில் சிறைகளில் உள்ளவர்கள் சிறைகளிலேயே தொடர்ந்தும் இருக்கின்றனர். மாவீரர்களாக மண்ணில் மடிந்துபோன 60 ஆயிரம் பேர் பற்றி ஒரு நாளாவது பேச தயாராக இல்லை. இவற்றிற்கு மத்தியில் சிலர் பதவி பற்றி சிந்திக்கின்றனர் என சிறிதரன் மேலும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, யாரெல்லாம் கடந்த 2009ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த நிகழ்வுகளின் நீட்சிகளை கொண்டுசெல்ல முயற்சிக்கின்றார்களோ அவர்கள் அரங்கிலிருந்து செல்வார்கள் என்ற செய்தியையே தற்போதைய நிகழ்வுகள் சித்தரிப்பதாக குறிப்பிட்ட கிறிதரன், அந்த செய்தியே இன்று பலபேரை பழிவாங்கி அனுப்பும் செய்தியாக மாறியுள்ளதென மேலும் குறிப்பிட்டார்.