விசாரணைக்குழுவினர் திட்டமிட்டே அபகீர்த்தியை ஏற்படுத்தி உள்ளனர் – சிறிதரன்

விசாரணைக்குழுவினர் திட்டமிட்டே சிலர் மீது அபகீர்த்தியை ஏற்படுத்தி வடமாகாணசபையின் செயற்பாட்டை முடக்கும் நோக்குடன் செயற்பட்டதாகவே கருதவேண்டிய நிலையேற்பட்டுள்ளதாக சிறிதரன் தெரிவித்தார்.

தொலைக்காட்சி நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு விசாரணைக்குழு அறிக்கை பற்றி கருத்து தெரிவித்தபோதே மேற்படி கருத்தை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

அமைச்சர்கள் மீது நடத்தபட்ட விசாரணை முறைமை தவறானது. அமைச்சர்கள் என்ற மதிப்புநிலை மீறப்பட்டு சாதாரணமானவர்களை விசாரிப்பது போல ஆதாரம் இன்றி தமது தனிநபர் நிலைப்பாடுகளை முன்வைத்து அறிக்கை தயாரித்துள்ளனர்.

ஏற்ற நீர்ப்பாசனத்திட்டம் என்பது தனியே விவசாய அமைச்சரால் முன்னெடுக்கப்பட்ட விடயம் அல்ல. மாகாணசபையில் விவாதிக்கப்பட்டு ஏற்கப்பட்ட ஒரு விடயம் அதிகாரிகள் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்ட விடயம். அதில் தவறு ஏற்படுமாக இருந்தால் அதற்கு யார் பொறுப்பெடுக்கவேண்டும். அந்த அதிகாரிகள் ஏன் விசாரிக்கப்படவில்லை.

விவசாய அமைச்சர் குறிப்பிடத்தக்க வகையில் நன்றாக செயற்பட்டார். நவம்பர் மாத நினைவுகளை சுமக்கின்ற மரநடுகை மாதத்தை நடைமுறைப்படுத்தினார். சிறந்த உணவகங்களை உருவாக்கும் நோக்கில் அம்மாச்சி உணவகங்களை ஏற்படுத்தினார். கார்த்திகை மலரை மக்கள் மத்தியில் கொண்டுசெல்ல அவர் முயன்றார். இவற்றை சிலர் பொறாமையுடன் அணுகினார்கள் என்பதையும் இங்கு சுட்டிக்காட்டவேண்டும்.

அதுபோன்று கல்வி அமைச்சர் ஒரு சில நாட்கள் அந்தப்பாடசாலையில் படித்த வரதன் மாஸ்டர் என அறிக்கை குறிப்பிடுகின்றது. அவர் 3.5 வருடங்கள் அங்கு படித்தவர். அதற்கான பத்திரங்கள் உண்டு. அவரை ஒரு சில நாட்கள் படித்தவர் என சொல்லமுடியும்.

அவரை ஒரு முக்கியமான ஒரு அறிக்கையில் வரதன் மாஸ்ரர் என குறிப்பிடுவது எப்படி பொருத்தமானது.

விசாரணையாளர்களின் தனிப்பட்ட செயற்பாடுகளும் தேர்தல் காலத்தில் சிலருக்கு சார்பாக உரையாற்றிய சம்பவங்களும் உண்டு. அவற்றை வைத்து இவற்றை நாம் அணுகவேண்டியுள்ளது.

அதுபோல தமிழர் உரிமைக்காக குரல்கொடுக்கும் மனோகணேசன் வடமாகாணசபை விடயங்களில் கருத்துச்சொல்வதற்கு முன்னர் அதுபற்றிய புரிதலை பெற்றுக்கொள்ளவேண்டும் என விரும்புகின்றேன். உதாரணமாக கல்வி அமைச்சருடன் தொடர்புகொண்டு இவ்விடயம் தொடர்பாக கதைத்திருக்கமுடியும். அவர் அதனை செய்யவில்லை.