காணாமல் போனோர் செயலகத்தின் கிளை வடக்கிலும் அமைக்க வேண்டும்! – சம்பந்தன்

காணாமல் போனவர்களை கண்டறிவதற்கான செயலகத்தின் செயற்பாடுகளை அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகம் அமைக்கும் சட்டமூலத்தின் இரண்டாம் மதீப்பீடு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

“காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் அமைக்கப்படுவதால் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பதை நாங்கள் தெளிவாக குறிப்பிட விரும்புகின்றோம். குறித்த அலுவலகத்தின் ஊடாக உயிரோடு இருக்கின்றவர்கள் தொடர்பான விபரங்கள் அறிவிக்கப்பட வேண்டும் என்பதுடன், மரணமடைந்தவர்களுக்கான மரணச் சான்றிதழ்களையும் வழங்க வேண்டும். அத்துடன், காணாமல் போனவர்களைக் கண்டறிவதற்கான அலுவலகம் கொழும்பில் அமைக்கப்பட்டாலும் வடக்கிலுள்ளவர்கள் முறைப்பாடுகளைச் செய்ய வடக்குப் பிரதேசத்திலும் ஒரு அலுவலகம் அமைக்கப்பட வேண்டும்” என இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.