வடக்கில் சில அரசியல் கோமாளிகள் மக்களை குழப்புகின்றனர் : சம்பந்தன்

தமிழ் மக்களுக்கு சுயாட்சியைப் பெற்றுக்கொடுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இலக்கை வட, கிழக்கில் மக்களால் தோல்வியடையச் செய்யப்பட்ட நிராகரிக்கப்பட்ட சில அரசியல் கோமாளிகள் முயற்சிக்கின்றனர் என எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் சபையில் குற்றம் சாட்டினார்.

பாராளுமன்றத்தில் காணமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (தாபித்தலும் நிர்வகித்தலும் பணிகளை நிறைவேற்றுதலும்) திருத்தச்சட்ட மூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குற்றம் சாட்டினார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
அரசாங்கத்தின் செயற்பாடுகளில் காணப்படும் கால தாமதங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழுத்தம் கொடுப்பதில்லையென்ற நிலைப்பாடு எமது சமூகத்தின் ஒரு பகுதியில் காணப்படுகிறது.

மக்களால் நிராகரிக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான தரப்பினர் இதற்கான பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் 2010ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தனர். 2015ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்தனர். இனி நடக்கப் போகும் தேர்தலிலும் அவர்கள் நிச்சயம் தோல்வியடைவார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முற்போக்கான கட்சியாகும். அதனைக் கூறுவதில் நான் பெருமையடைகிறேன். சகல மக்களும் ஒன்றாக சம அந்தஸ்துடனும் நீதியான சூழலிலும் வாழ வேண்டும் எனவே நாம் விரும்புகின்றோம். எனினும் மக்கள் ஒருவரை ஒருவர் பகைத்துக் கொண்டு இருக்க வேண்டும் என எமது பிரதேசங்களில் உள்ள சில அரசியல் கோமாளிகள் விரும்புகின்றனர்.

சமாதானமான நாட்டில் தமிழ் மக்களின் பகுதிகளில் சுயாட்சிக்கான நிலைமையை ஏற்படுத்த வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நோக்கமாகும். எனினும நாட்டில் குழப்பம் இருக்க வேண்டும் என்பது அவர்களின் நோக்கம்.

அரசியல் நிலைப்புத் தன்மைக்காக அவர்கள் குழப்பம் ஏற்பட வேண்டுமென விரும்புகின்றார்கள். இதற்கு இடமளிக்கும் வகையில் அரசாங்கம் தனது உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில் மேலும் காலதாமதங்களைச் செய்யக் கூடாது என்றார்.