ஆதரவு தமது பாதை சரியானது என்பதை உறுதிப்படுத்துவதாக முதலமைச்சர் இன்று விடுத்துள்ள அறிக்கை!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் கீழான தமது செயற்பாடுகள் மற்றும் தீர்மானங்கள் குறித்து சலனமடைந்திருந்ததாக வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

எனினும் மக்களின் ஆதரவு தமது பாதை சரியானது என்பதை உறுதிப்படுத்துவதாக முதலமைச்சர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து வந்தவருக்கு மக்கள் பலம் இல்லை எனக்கூறிய அனைவரும் மக்களின் அன்பினால் திகைத்து நின்றதாக முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தம்மைக் காண வந்தவர்கள் சேர்க்கப்பட்டவர்கள் அல்லவெனவும், உணர்வு மேலீட்டால் சேர்ந்தவர்கள் என்பது உலகறியச் செய்யப்பட்டுள்ளதாகவும் அவரது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

போட்டுடைத்தவர்களை அடையாளம் காண்பதற்கு அவர்களுக்கு மக்கள் சந்தர்ப்பமளித்துள்ளதாகவும் சி.வி விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழர் அரசியல் பிரச்சினையை விரைவில் தீர்ப்பதாகத் தெரிவித்தவர்களுக்கு, அவர்களின் 13 ஆம் திருத்தச்சட்ட அடிப்படையிலான தீர்வுகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்ற செய்தி ஓங்கி உரைக்கப்பட்டுள்ளதாகவும் அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் ஊழலுக்கு எதிரானவர்கள் என்ற செய்தியையும் மக்கள் உலகறியச் செய்துள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இளைஞர்களின் எழுச்சி தம்மை பரவசம் கொள்ளச் செய்ததாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர், தமிழ் மக்கள் நலன்கருதி அவர்களின் ஈடேற்றத்திற்காக கைகோர்த்து நிற்பதே இதற்கான கைமாறு எனவும் குறிப்பிட்டுள்ளார்.