தமிழரசுக் கட்சியை பலவீனப் படுத்த தமிழ் மக்கள் பேரவை முயற்சி

தமிழரசுக் கட்சியை பலவீனப்படுத்துவதற்கான நிகழ்ச்சி நிரலைக் கொண்டு தமிழ் மக்கள் பேரவை செயற்பட்டு வருகின்றதென தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா குற்றஞ்சாட்டியுள்ளார்.

எனினும், இவ்வாறான செயற்பாடுகளால் கட்சியை ஒருபோதும் பலவீனப்படுத்த முடியாதென மாவை மேலும் தெரிவித்துள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) வெளியாகியுள்ள தமிழ் நாளிதழொன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஆரம்பத்தில் ஓர் சமூக அமைப்பாக ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை, தற்போது தமிழரசுக் கட்சிக்கு பிரச்சினைகளை தோற்றுவித்து வருகின்றதென குறிப்பிட்ட மாவை, அண்மையில் வடக்கு மாகாண சபையில் தோன்றிய பிரச்சினைகளுக்கும் தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர்கள் மறைமுகமாக செயற்பட்டனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும, கூட்டமைப்பின் தலைமை மீது வடக்கு கிழக்கு மக்கள் மட்டுமன்றி சர்வதேச சமூகமும் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் கொண்டுள்ளதெனவும், எனவே அரசியல் விவகாரங்களில் பிரச்சினைகளை ஏற்படுத்தாது சமூக விடயங்களில் தமிழ் மக்கள் பேரவை கவனஞ்செலுத்துவது உகந்ததென்றும் மாவை சேனாதிராஜா மேலும் தெரிவித்துள்ளார்.