பங்காளி கட்சிகளால் தாக்கப்படும் தமிழரசுக் கட்சி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் ஒன்றிணைந்து தமிழரசுக் கட்சிமீது தாக்குதல் நடத்துபவர்களாகவே இருக்கிறார்கள் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் தலைமை உடைக்கப்பட்டால் அல்லது இல்லாமல் செய்யப்பட்டால் தமிழர்களுக்கு எந்தக் காலத்திலும் விடிவு என்பது இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன் போது “கூட்டமைப்பு பதிவு செய்யப்படாமை குறித்து கேள்வியெழுப்பட்டது.

இதற்கு பதிலளித்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவுசெய்வதில் எந்த ஒரு இடையூறுகளும் இதுவரை ஏற்படவில்லை.

எனினும், கூட்டமைப்பில் இணைந்துள்ள மூன்று கட்சிகளும் சம அந்தஸ்துக் கேட்கின்றனர். இதன் மூலம் தமிழரசுக் கட்சியை இல்லாமல் செய்வதே அவர்களின் நோக்கமாகவும் இருக்கின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, அண்மையில் வடமாகாண சபையில் இடம்பெற்ற குழப்ப நிலையின் போது ஈபி.ஆர்.எல்.எவ், ரெலோ, மற்றும் புளொட் போன்ற அமைப்புக்கள் ஒன்றிணைந்து தமிழரசுக் கட்சிமீது தாக்குதல் நடத்துபவர்களாகவே இருக்கிறார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.