பாதுகாப்புத் தரப்பினரால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கு எதிராகச் சட்டநடவடிக்கை எடுப்பதாகப் பன்னாட்டுச் சமூகத்துக்கு கொடுத்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு தவறிவிட்டதாக, ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சனின் அறிக்கையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மனதார வரவேற்பதாக அந்தக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அத்துடன் போர்க்குற்ற விசாரணையிலிருந்து இலங்கை அரசு ஒருபோதும் தப்பிக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்கு வருகை தந்த ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன், தனது பயண முடிவில் இலங்கை தொடர்பான அறிக்கையை வெளியிட்டிருந்தார். அத்துடன் கொழும்பில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் மிகக் காரசாரமான குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசு மீது சுமத்தியிருந்தார். இவரது அறிக்கை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்று எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தனிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கையின் தற்போதைய அரசு இணை அனுசரணை வழங்கி நிறைவேற்றிய தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும். இதனை நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதிலிருந்தோ போர்க்குற்ற விசாரணையிலிருந்தோ இலங்கை அரசு தப்பிக்கவும் முடியாது – நழுவவும் முடியாது.
ஐ.நா. தீர்மானத்தை இலங்கை அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்பதால், கடும் எதிர்ப்பு – அழுத்தங்களைப் பிரயோகித்து கால அவகாசத்தை ஐ.நா. வழங்கியது. எனவே பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டிய கடப்பாடு அரசுக்கு இருக்கின்றது. ஐ.நா. சிறப்பு அறிக்கையாளரின் அறிக்கையை நாம் முழு மனதுடன் வரவேற்கின்றோம். ஐ.நா. தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டாலே நாட்டில் நல்லிணக்கம் தோன்றும். மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றம் இனிமேல் நடைபெறாது என்பது உறுதிப்படுத்தப்படவேண்டும்.
மகிந்த அரசு பன்னாட்டுச் சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறிச் செயற்பட்டது. பன்னாட்டுச் சமூகத்தைப் பகைத்துக் கொண்டது. வழிதவறி நடந்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தற்போதைய அரசும் முன்னைய அரசின் பாதையில் செல்ல முற்படக் கூடாது – என்றார்.