கண்ணீர் விடுகின்ற மக்களுக்கு பதில் சொல்கின்ற கடப்பாடு நல்லாட்சி அரசுக்கு இருக்கிறது: மாவை

கடந்த அரசாங்கத்தின் செயற்பாட்டால் கண்ணீர் விடுகின்ற மக்களுக்கு பதில் சொல்கின்ற கடப்பாடு நல்லாட்சி அரசுக்கும் அதன் தலைவர் மைத்திரியால சிறிசேனவிற்கும் இருக்கிறது என தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்றையதினம் (22) இடம்பெற்ற பொது நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்களினால் எழுப்பப்ட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையிலேயே யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரு ஓரங்களில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் அவர்கள் தங்கள் கணவனை மகனை மற்றும் உறவுகளை மீட்க அவர்கள் எங்கே? என்ற கேள்வியுடன் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

உண்மையில் முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிகழ்வுகள் ஏற்பட்டிருந்தாலும் இந்த அரசாங்கம் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

சென்ற அரசாங்கத்தின் செயற்பாட்டால் கண்ணீர் விடுகின்ற மக்களுக்கு பதில் சொல்கின்ற கடப்பாடு நல்லாட்சி அரசுக்கும் அதன் தலைவர் மைத்திரிபால சிறிசேனாவிற்கும் இருக்கிறது.

அத்துடன் தமிழ் மக்கள் இந்த ஆட்சியை கொண்டு வந்த பொழுது தங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று நம்பியிருந்தார்கள். இரண்டு ஆண்டுகளாகியும் எமது மக்களுக்கு பதில் சரியாக கிடைக்கவில்லை.

இழந்து போன உயிர்கள் ஒரு புறம் குறிப்பாக இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்கள் மற்றும் சரணடைந்தவர்களைத்தான் தமிழ் மக்கள் கேட்கின்றார்கள். அதற்கு இந்த அரசாங்கம் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

ஐ.நா மனித உரிமைப் பேரவை மற்றும் ஐ.நா சபை நிறைவேற்றிய தீர்மானங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சம்பந்தமாக இந்த அரசு பதில் சொல்ல வேண்டும் என்ற அடிப்படையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாகத்தான் அரசு விரும்பாது விட்டாலும் இராணுவத்தினர் இழைத்த பல குற்றங்களுக்கு பதில் சொல்லுவதற்கு தயக்கம் காட்டினாலும், ஐ.நா மனித உரிமை பேரவையின் தீர்மானத்தின் அடிப்படையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றி பதில் சொல்லக்கூடிய விசாரணை நடத்தக் கூடிய ஒரு அலுவலகத்தை அமைக்கும் சட்ட மூலத்தில் ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளார்.

இது ஒரு முன்னேற்றகரமான செயற்பாடாக இருந்தாலும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள் எல்லோருக்கும் இவர்கள் எவ்வாறு விடைதரப் போகிறார்கள்.

அரசாங்கத்தின் பதிலில் திருப்திப்படுவார்களா? மக்களின் கண்ணீர் துடைக்கப்படுமா? என்பது சந்தேகத்திற்குரியதாகவே இருக்கும்.

ஏனெனில் பலவிதமான அடிப்படைகளில் இராணுவத்தினரால் கொல்லப்பட்டவர்களும் இன்னும் எத்தனை பேர் உயிரோடு இருக்கிறார்கள் என்பதும் ஒரு தெளிவற்ற நிலைமை காணப்படுவதால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கேள்விக்கு இருக்கின்றது.

ஆனாலும் இந்த அரசாங்கம் எடுக்கின்ற நடவடிக்கைகள் காணாமல் அக்கப்பட்டவர்களுக்கு விசாரணை நடத்தி நீதியை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் ஜனாதிபதி அவர்கள் அந்த சட்டமூலத்தில் கையெழுத்திட்டு அந்த அலுவலகம் திறக்கப்படும் பட்சத்தில், தமிழ் மக்களுக்கு ஒரு நம்பிக்கையையும் ஒரு பயனையும் கொடுக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என நாங்கள் வற்புறுத்துகின்றோம் என தெரிவித்தார்.