காணாமல் போவதற்கு காரணமாக இருந்த மகிந்தவும் கோத்தவும் சுதந்திரமாக இருக்கின்றார்கள்: சிறீதரன்

காணாமல் போவதற்கு காரணமாக இருந்த மகிந்த ராஜபக்ச – கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் இந்தநாட்டிலே சுதந்திரமாக இருக்கின்றார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்தார்.

வவுனியா கனகராயன்குளத்தில் நேற்று நடைபெற்ற ஈழப்புரட்சி அமைப்பின் ஈழவிடுதலைக்காய் உயிர் நீத்தவர்களின் நினைவஞ்சலியும் மரம் நடுகையும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இறுதி யுத்தத்தின் போது ஈழப்புரட்சி அமைப்பின் தலைவர் பாலகுமாரும் அவருடைய மகன் சூரியதேவனை சுற்றி இராணுவ சீருடையுடன் சுற்றிவர இராணுவம் இருக்கின்ற படத்தினை சர்வதேச மற்றும் உள்நாட்டு ஊடகங்கள் பிரசுரித்திருந்தது.

அத்துடன் சர்வதேச வானொலியை சேர்ந்த ஹரிசனும் இப்படத்தினை பிரசுரித்து சரணடைந்தவர்கள் எங்கே என்ற கேள்வியினை கேட்டிருந்தார்.

நானும் பலமுறை பாராளுமன்றத்தில் இது தொடர்பாக கேள்வியெழுப்பியுள்ளேன். குறிப்பாக ஒவ்வொரு வருட வரவு செலவு திட்டத்தின் போது இதனை கட்டாயமாக நான் பாராளுமன்றத்தில் சரணடைந்தவர்கள் எங்கே என்ற விடயத்தினை கேட்டிருக்கிறேன்.

ஒரு இயக்கத்தின் தலைவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரும் தேசிய தலைவருமான வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் இணைந்து செயற்பட்ட காரணத்திற்காக அவர் சரணடைந்தும் காணாமல் போயிருக்கின்றார்.

அத்துடன் அரசியல் துறை துணை பொறுப்பாளர், விளையாட்டுத்துறை பொறுப்பாளர் என பல போராளிகள் தனியாகவும் குடும்பமாகவும் சரணடைந்தனர். சிலரை மனைவி அல்லது தாய் தந்தையர் நேரடியாக அந்த கால கட்டத்திலே அரச பயங்கரவாதம் புரிந்த மகிந்த ராஜபக்சவிடமும் அவருடைய தம்பி கோத்தபாய ராஜபக்சவிடமும் இவர்கள் கையளிக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு கையளிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்களா, இல்லையா என்று கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மருதங்கேணி, திருகோணமலையிலும் எங்களுடைய மக்கள் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் இப்பொழுது தான் காணாமல் போனவர்களிற்கான அலுவலகம் அமைப்பது தொடர்பாக வர்த்தமானியில் ஒப்பமிட்டுள்ளார்.

அதிலும் வெளிநாட்டு நீதித்துறை சார்ந்தவர்கள், சட்டவல்லுனர்கள், நிபுணர்கள் வருவதற்கு இன்னும் இலங்கை அரசு ஒத்துக்கொள்ளாத நிலையில் ஜனாதிபதி வர்த்தமானியிலே ஒப்பமிட்டுள்ளார்.

இவ்வாறு இருக்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்ட்டவர்களிற்கான நீதி எவ்வாறுகிடைக்கும் என்ற கேள்வி எங்களிடம் இருக்கின்றது.

அரச பயங்கரவாதம் செய்த கோத்தபாய அடுத்த ஜனாதிபதி தேர்தலிலே போட்டியிடுவார்என்று ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

மன்னார் ஆயர் இராஜப்பு ஜேசப் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு முன் சாட்சியமளிக்கும் போது சொன்னார் ஒரு லட்சத்து நாற்பத்தாறாயிரத்து நானூற்று இருபது பேர் காணாமலும் கொலை செய்யப்பட்டும் இருக்கிறார்கள் அல்லது அவர்கள் எங்கே போயிருக்கிறார்கள்.

நான்கு இலட்சத்து இருபதாயிரம் மக்கள் வாழ்ந்த இடத்திலே மூன்று இலட்சம் அளவிலான மக்களே வவுனியாவிற்குள் வந்தார்கள் என்றால் மிகுதி பேருக்கு என்ன நடந்தது?.

இதனை சகல கணக்குகளுடன் முன்னாள் மன்னார் ஆஜர் தனது சாட்சியத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அவ்வாறான ஒரு லட்சத்து நாற்பத்தாறாயிரத்து நானூற்று இருபது பேரையும் காணாமல் ஆக்குவதற்கும், கொன்றொழிப்பதற்கும் அரச பயங்கரவாதம் புரிந்த இனப்படுகொலையாளிகள் மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச இன்றும் சுதந்திரமாக உலாவிக்கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுடன் எம்மவர்கள் கூட கைகோர்த்து திரிகிறார்கள். இவ்வாறான நாட்டிலே ஈழப்புரட்சி அமைப்பின் தலைவர் பாலகுமரை மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச காணாமல் செய்தார்களோ அவர்கள் இந்த நாட்டிலே சுதந்திரமாக இருக்கின்றார்கள் என்றார்.