de s

பொலிஸாரின் அவசரத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை! மாவை

மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனைக் குறிவைத்து நல்லூரில் நடத்தப்பட்டதாக கூறப்படும் தாக்குதல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ஏற்கனவே கண்டன அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து நீதிக்காகக் குரல் எழுப்பும் அனைத்துத் தரப்பினராலும் கண்டனம் வெளியிடப்பட்டு வருவதும், உண்மை கண்டறியப்பட்டு குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்கும் மேலாக, எதிர்வரும் காலங்களில் இவ்வாறான வன்முறைகள் இடம்பெறக் கூடாது என்றும் குரலெழுப்பி வருவது வரவேற்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அண்மைக் காலங்களில் தமிழ் பிரதேசங்களில் இடம்பெற்று வரும் வன்முறைகள் குறிப்பாக வாள்வெட்டு, கடத்தல், பாலியல் வன்கொடுமை, போதைப் பொருள் பாவனை, சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரால் அச்சுறுத்தப்படல், துப்பாக்கிப் பிரயோகத்தினால் இடம்பெறும் கொலைகள் போன்றவற்றுக்கு எதிராக பொலிஸாரின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. இதனால் இத்தகைய சம்பவங்கள் கட்டுப்பாடற்றுச் செல்கின்றன என்று விமர்சனங்களும் எழுந்து வருகின்றது.

நீதிமன்ற நடவடிக்கைகளினால் குறிப்பாக நீதிபதி இளஞ்செழியனின் தீர்ப்புக்கள், நடவடிக்கைகளினால் மேற்குறித்த வன்முறைகள், சட்ட அத்துமீறல்கள், அதிகார துஸ்பிரயோகங்கள் குறைவடைய ஆரம்பித்தன.

ஆனால் நீதிபதி இளஞ்செழியனையே குறிவைத்து நடத்தப்பட்டுள்ள துப்பாக்கி வேட்டுக்கள், அவரின் உயிரைப் பாதுகாக்க உடன் செயல்பட்ட காவலர்களில் ஒருவர் உயிரிழந்தும் இன்னொருவர் படுகாயமடைந்தும் அவல நிலையடைந்திருப்பது அனைவருக்கும் வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இதன் காரணமாக நீதிகோரி கண்டனங்கள், பொது வேலை நிறுத்தம் எனும் மக்கள் கிளர்ச்சி எழுந்திருக்கிறது.

இதனிடையே இன்றைய செய்திகளில் இக் ´கொலை முயற்சியின் இலக்கு நீதிபதி இளஞ்செழியன் அல்ல´ என்று பொலிஸ் தரப்பபுச் சொல்கிறது என்பது ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.

நீதிபதி இளஞ்செழியன் அவர்களே தன்னைப் பாதுகாக்கத் தன்னுயிரைத் தியாகம் செய்தார் என சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியிருக்கின்றார். அக் கொடிய சம்பவத்தில், சம்பந்தப்பட்டவர் ஒரு நீதிபதி என்பதைத் தெரிந்தும் பொலிஸார் ஏன் அவசரப்பட்டு ´இளஞ்செழியன் இலக்கு அல்ல´ என்று செய்தி சொல்கிறார்கள் என்ற கேள்வியை எழுப்புகின்றோம்.

விசாரணைகள் முடிந்து விட்டனவா என்ற கேள்வியும் நீதிபதி இளஞ்செழியனின் கருத்துக்களுக்குச் சவால் விடுவதுமாகவே பொலிஸ் தரப்புச் செய்தி இருக்கின்றதென்பதை பகிரங்கமாகக் குறிப்பிடுகின்றோம்.

அப்படியானால் அச் சம்பவத்தின் இலக்கு யாருக்கு எதிரானது என்பதையும் சொல்ல வேண்டும். இச் சம்பவம் வேதனை மிக்கதும் கண்டனத்திற்கும் உரியதாகவும் இருக்கும் போது, பொலிஸாரின் அவசரத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஜனாதிபதி அவர்களே நீதிபதி இளஞ்செழியனுக்கு ஆறுதல் சொல்லி பூரண விசாரணைக்கு உத்தரவிட்ட பொழுது பொலிஸாரின் அவசரச் செய்தியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பதை வற்புறுத்தி நிற்கின்றது.

இலங்கையில் நீதிபதி இளஞ்செழியனின் உயிருக்கு இலக்கு வைக்கப்பட்டிருப்பதும் நீதித் துறைக்குச் சவாலை ஏற்படுத்தியிருப்பதும் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கக் கூடியதென சுட்டிக்காட்டுகிறோம்.

இத்தகைய சம்பவங்களினால் வடக்கில் வன்முறைகள் கட்டுக்கடங்காமல் செல்வதன் மூலம் மீண்டும் காவல்துறையின், இராணுவ அடக்கு முறையின் தேவை ஏற்பட்டுள்ளதென்ற ஒரு நிலையை அரசு ஏற்படுத்திவிட இடம்மளித்துவிடக் கூடாது.

நீதிபதி இளஞ்செழியன் மீது, நீதித் துறையின் மீது வன்முறை, துப்பாக்கி வேட்டுத் தீர்க்கப்பட்டிருப்பதன் உண்மையை அறிய வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளார்.