வடமாகாண சபை மீது குற்றம் சாட்டுவது அறிவிலித்தனமானது: பொ.ஐங்கரநேசன்

வடமாகாணசபை வினைத்திறன் அற்றதென்று விமர்சிப்பவர்கள் அரசியல் உள்நோக்கத்துடனேயே அதைச் செய்கிறார்கள் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் அராலி மேற்கு முத்தமிழ் சனசமூக நிலையத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாணசபை மூன்றரை வருடங்களைக் கடந்துவிட்ட போதும் ஊழல்கள் செய்ததைத் தவிர வேறு எதனையும் சாதிக்கவில்லை என சிலரால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

பிரேரணைகளை நிறைவேற்றியுள்ளதே தவிர வினைத்திறனாகச் செயற்படவில்லை என்று சிலரால் மாகாணசபையிலேயே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன இதுதவிர மக்கள் மத்தியிலும் இதே கருத்துக்களைப் பரப்பி வருகின்றார்கள்.

விமர்சனங்கள் ஒரு பயிருக்கு உரம் இடுவது போன்று இருக்க வேண்டுமே தவிர, அதன் வேரையே அறுத்து விடுவதாக இருக்கக் கூடாது.

இப்போது வடக்கு மாகாணசபை மீது முன்வைக்கப்பட்டு வருகின்ற குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள் எல்லாம் மாகாணசபையை வளப்படுத்தும் நோக்கிலோ, வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும் நோக்கிலோ முன்வைக்கப்படவில்லை.

மாறாக, மாகாணசபையை பலவீனப்படுத்துவதாகவும், வடமாகாண சபைமீது மக்கள் மத்தியில் அபகீர்த்தியை ஏற்படுத்துவதாகவுமே அவை உள்ளன.

இலங்கையின் ஒன்பது மாகாணசபைகளில் வடக்கு மாகாணசபையே ஆகக் குறைந்த வயதுடைய மாகாணசபை. ஏனைய மாகாணசபைகள் 30 வருடங்களை எட்டியுள்ள நிலையில் வடக்கு மாகாணசபை இப்போதுதான் மூன்றரை வருடங்களைக் கடந்து வந்திருக்கிறது.

இந்நிலையில், ஏனைய மாகாணசபைகளுடன் ஒப்பிட்டு வடமாகாண சபை எதுவுமே செய்யவில்லை என்று குற்றஞ்சாட்டுவது அறிவிலித்தனமானது.

தென் இலங்கை மாகாண சபைகள் வயதால் மூத்தவை மாத்திரம் அல்ல எப்போதுமே மத்திய அரசாங்கத்தின் ஆசீர்வாதமும் பெற்றவை. முழுமையான அதிகாரப் பகிர்வு அம்மாகாணங்களுக்கு அவசியம் இல்லாத ஒன்று.

ஆனால், வடக்கு மாகாணசபைக்கு அவ்வாறான நிலை இல்லை. எந்த அபிவிருத்தியை அல்லது வேலைத் திட்டத்தை முன்னெடுத்தாலும் நாம் விரும்பிய விதத்தில் விரும்பிய நேரத்தில் அவற்றை முடிக்க முடியாதவாறு மத்திய அரசாங்கத்தின் அதிகாரத் தலையீடுகள் பெரும் தடைகளாகவே இருக்கின்றன.

மூன்று தசாப்த காலப் போரில் சமூக, அரசியல், பொருளாதாரக் கட்டுமானங்கள் யாவும் சிதைவடைந்த நிலையிலேயே வடக்கு மாகாணம் உள்ளது. இவற்றை சீரமைப்பதற்கு மூன்று தசாப்த காலம்கூடப் போதாது.

இந்த நிலையில், மூன்றரை வயதுடைய மாகாணசபையை, அதன் அமைச்சர்களை, முதலமைச்சரை கையாலாகாதவர்களாக விமர்சிப்பது, மக்கள் மத்தியில் இருந்து எம்மை அந்நியப்படுத்தும் உள்நோக்கம் கொண்டது ஆகும்.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களது தலைமையிலான வடக்கு மாகாணசபையைத் தங்களது காலில் குத்துகின்ற ஒரு முள்ளாகவே தென் இலங்கை அரசியல் வாதிகள் உணருகிறார்கள்.

வடக்கு மாகாணசபை தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமைக் கோரிக்கைக்குப் பலம் சேர்த்து விடுமோ என்ற அச்சம் அவர்களில் தொற்றிக் கொண்டுள்ளது.

இதனாலேயே எம்மவர்கள் சிலரைக் கொண்டே, வடக்கு மாகாணசபை நிர்வாகத்தின் மீது மக்களை வெறுப்படைய வைக்கும் விதமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.