தமிழரின் பிரச்சினைகளுக்கு உடன் தீர்வு வழங்க வேண்டும்: சம்பந்தன்

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இலங்கை அரசு காலத்தை இழுத்தடிக்காமல் உடன் தீர்வு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு கனேடிய அரசு உள்ளிட்ட சர்வதேச சமூகம் இலங்கை அரசிற்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான கனேடியத் தூதுவர் ஷெல்லி வைற்றிங், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பு நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்றது.

குறித்த சந்திப்பில் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள், புதிய அரசமைப்பு உருவாக்கம் எனப்பல விடயங்கள் பேசப்பட்டன என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இலங்கை அரசு காலத்தை இழுத்தடிக்காமல் உடன் தீர்வு வழங்க வேண்டும் எனவும், இதற்கு கனேடிய அரசு இலங்கை அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் இந்தச் சந்திப்பில் தான் தூதுவரிடம் வலியுறுத்தினேன் என்று இரா.சம்பந்தன் மேலும் கூறினார்.