யாழில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அமெரிக்க துணைத் தூதுவர் சந்திப்பு.

வடக்கிற்கான பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்காவுக்கான அமெரிக்க துணைத் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

அமெரிக்க துணைத் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன், நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தார்.

இதன் ஒரு கட்டமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அவர் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

யாழ். நகரில் உள்ள விடுதி ஒன்றில் நடந்த இந்தச் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இதன் போது, சிறிலங்கா இராணுவத்தினரின் வசமுள்ள காணிகள் விடுவிப்பு, காணாமல் போனோர் பணியகத்தின் முன்நோக்கிய செயற்பாடுகள் குறித்தும், வடக்கு மாகாண அபிவிருத்திக்கு முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குதல் தொடர்பாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.