யாழில் நிலவும் அச்சுறுத்தல் குறித்து வடக்கு முதல்வர் விளக்கம்

போர்ப் பயிற்சி பெற்றவர்கள் வடக்கில் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன், தெரிவித்துள்ளார்.

அத்துடன், வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் வெளியேற வேண்டும் என்பதை தற்போதும் கோருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

வடக்கில் இடம்பெறும் சமூகவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த முப்படையினரை களமிறக்கப்போவதாக பொலிஸ்மா அதிபர் அண்மையில் கூறியிருந்தார்.

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வடமாகாண முதலமைச்சர், “முப்படையினரையும் களமிறக்கப் போவதாக பொலிஸ்மா அதிபர் கூறவில்லை.

பொலிஸாருக்கு உதவியாக சிறப்பு அதிரடிப்படையினரையும், இராணுவத்தையும், தேவைப்பட்டால் மக்கள் விருப்பப்பட்டால் களமிறக்க இருப்பதாகவே கூறியிருந்தார்.

வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் வெளியேற வேண்டும் என்பதே என்னுடைய நிலைப்பாடு. எனினும், குற்றங்கள் நடைபெறும் போது அவற்றைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது சட்டம், ஒழுங்குக்கு பொறுப்பான அமைச்சரின் கடமையாகும்.

எவ்வாறாயினும், படையினர் வெளியேற வேண்டும் என்ற நிலைப்பாட்டிலிருக்கும் ஒருவர் எது நடந்தாலும் அவர்களுடைய ஒத்துழைப்பைக் பெறக்கூடாது என்று அர்த்தமில்லை.

அப்படியாகவிருந்தால். எது நடந்தாலும் நாங்கள் சும்மா இருக்க வேண்டும் என்று பொருள்படும்.

இதேவேளை, படையினரை அவசரத்திற்கும் களமிறக்கப்படுவதை எதிர்க்க வேண்டும் என்று கேட்பவர்கள், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமானவர்களாகவே இருப்பர்” என அவர் மேலும் கூறியுள்ளார்.