தாயக எல்லைப்பகுதிகளில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை தடுத்து நிறுத்த தொடர்ந்தும் குரல் கொடுப்போம்: சிறீதரன்,சீ.யோகேஸ்வரன்

வடக்கு கிழக்கு மாகாணங்களின் எல்லைக் கிராமங்களில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை தடுத்து நிறுத்துவதற்கு நாடாளுமன்றில் தொடர்ந்தும் குரல் கொடுப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன் மற்றும் சீ.யோகேஸ்வரன் ஆகியோர் சுட்டிக்காட்டியிருப்பதுடன், நல்லாட்சி காலத்திலும் சிங்கள குடியேற்றங்கள் நிறுத்தப்படவில்லை எனவும் கூறியிருக்கின்றனர்.

சமகால அரசியல் நிலைமைகள் குறித்து இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போது மேற்கண்டவாறு கூறியிருக்கின்றனர்.

இதன்போது கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கூறுகையில்,

கிழக்கு மாகாணத்தில் எல்லை கிராமங்களில் பௌத்த மத துறவிகளால் பௌத்தர்கள் வாழ்ந்த பகுதிகளாக தமிழ் மக்களுடைய நிலங்கள் அடையாளப்படுத்தப்பட்டு சிங்கள குடியேற்றங்களால் நிரப்பபடுகின்றது.

அதேபோல் முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலரால் திட்டமி ட்ட முஸ்லிம் குடியேற்றங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதேபோல் வடகிழக்கு மாகாணங்களில் 246 இடங்கள் தொல்லியல் பிரதேசங்களாக அடையாளப் படுத்தப்பட்டிருக்கின்றது.

இவ்வாறு வடகிழக்கு மாகாணங்களில் போருக்கு பின்னர் தமிழர்களின் நிலங்களை பூரணமாக அபகரிப்பதற்கு சதி திட்டம் தீட்டப்படுகின்றது.

உதாரணமாக வாகரை பிரதேச செயலர் பிரிவில் காரமுனை கிராமத்தில் அண்மையில் 188 குடும்பங்களுக்கு தலா 6 ஏக்கர் காணி வழங்கி சிங்கள குடியேற்றம் ஒன்றை உருவாக்க சதி திட்டம் தீட்டப்பட்டது.

இதனை மாகாண காணி ஆணையாளரே மேற்கொண்டிருந்தார். அந்த பகுதியில் சிங்களவர்கள் முன்னர் வாழ்ந்ததில்லை.

மேலும் மேற்படி சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்ட காணி ஆவணங்கள் சிங்கள மொழியில் வழங்கப்பட்டிருக்கின்றது. எனவே நன்கு திட்டமிடப்பட்ட வகையில் மேற்கொள்ளப்படுகின்றது.

மேலும் கல்லோயா திட்டம் மற்றும் மகாவலி திட்டம் ஆகியவற்றின் ஊடாகவும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என கூறினார்.

தொடர்ந்து வடமாகாண நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கூறுகையில்,

கிழக்கு மாகாணத்தை ஒத்ததாக வடமாகாணத்திலும் எல்லைக் கிராமங்களில் குறிப்பாக முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் எல்லைப் பகுதிகளில் போர் காரணமாகவும், சிங்கள காடையர்களின் தாக்குதல்களினால் மக்கள் வெளியேற்றப்பட்டதன் பின்னர் சிங்கள மக்கள் திட்டமிட்டு குடியேற்றப்பட்டனர்.

பல தமிழ் கிராமங்கள் சிங்கள பெயரில் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது. குறிப்பாக வவுனியா மாவட்டத்தில் தமிழ் கிராமம் ஒன்றுக்கு நாமல் புர என்ற சிங்கள பெயர் மாற்றப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் வடகிழக்கு மாகாணங்களில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை தடுத்து நிறுத்துவதற்கு 3ம் தரப்பினரின் மத்தியஸ்தம் தேவை என கூறினார்.

இந்நிலையில் வடகிழக்கு மாகாணங்களின் எல்லைப் பகுதிகளில் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றங்களை தடுத்து நிறுத்துவதற்கு நாடாளுமன்றில் தொடர்ந்தும் நடவடிக்கை எடுப்போம் என அவர்கள் மேலும் கூறியிருந்தனர்.

இப்பத்திரிகையாளர் சந்திப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரனும் கலந்து கொண்டார்.