சூழ்ச்சிகரமாக நிலங்களை அபகரிக்கும் அரசாங்கம்: சிறீதரன் எம்.பி

எங்களுடன் பேசிக்கொள்வது போல காட்டிக்கொண்டு மறுபக்கத்தில் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்புக்களை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி – இரணைதீவு மக்கள் தமது பூர்வீக நிலங்களை விடுவிக்கக் கோரி இன்று 100 ஆவது நாளாகவும் தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் அது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

பூர்வீகமாக வாழ்ந்த இரணைதீவு மக்களினுடைய நிலத்தை அரசாங்கம் விடுவிக்கவில்லை. இவ்வாறு போராடி வருகின்ற மக்கள் 100 நாட்களுக்கு மேலாக வீதியிலிருந்து தொழிலின்றி, பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் போராடி வருகின்றனர்.அண்மையில் இந்த மக்களைச் சந்தித்த இராஜாங்க அமைச்சர் இரண்டு வாரங்களுக்குள் ஜனாதிபதியுடன் பேசி தீர்வினைத் தருவதாக உறுதியளித்த போதிலும், 2 மாதங்களை கடந்த நிலையில் அந்த மக்களுக்கான தீர்வு இன்னமும் வாழங்கப்படவில்லை.

கேப்பாப்புலவு, இரணைதீவு, ஆகிய பகுதிகளில் தமது பூர்விக நிலங்களை விடுவிக்கக் கோரி இந்த மக்கள் போராடி வருகின்றனர்.நிலங்களுக்காக இன்று மக்கள் போராடிக் கொண்டிருக்கின்ற போது அந்த நிலங்களை விடுவிக்காது போராட்டங்களை நீளவிட்டுச் செல்வதுடன்,

அரசாங்கம் எங்களுடன் பேசிக்கொள்வது போல காட்டிக்கொண்டு மறுபக்கத்தில் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்புக்களை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுத்து வருகின்றது.

ஆகவே நல்லாட்சி அரசாங்கம் மீது மக்கள் கொண்டிருக்கின்ற நம்பிக்கையை முற்றுமுழுதாக இல்லாமல் செய்யவே போராட்டங்களை நீளவிட்டு அரசாங்கம் வேடிக்கை பார்க்கின்றது என மேலும் தெரிவித்துள்ளார்.