மக்களின் ஜனநாயக உரிமை தடை செய்யப்படுவதற்கு இடமளியோம்: எதிர்க்கட்ச்சி தலைவர் சம்பந்தன்!

உரிய காலத்தில் தேர்தல் நடத்தப்படாது, தமது தீர்மானத்தை அறிவிக்கும் மக்களின் ஜனநாயக உரிமை தடை செய்யப்படுவதை தாம் ஒருபோதும் ஏற்கப் போவதில்லை என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஒன்பது மாகாணங்களுக்குமான தேர்தலை ஒரே நாளில் நடத்துவது தொடர்பில் அரசியலமைப்பு திருத்தமொன்றை மேற்கொள்வது தொடர்பில், கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து கேள்வியெழுப்பிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு, வடமத்திய, சப்ரகமுவ மாகாணங்களுக்கான ஆயுட்காலம் நிறைவுக்கு வரவுள்ள நிலையில், ஒன்பது மாகாணங்களுக்கும் ஒரே நாளில் தேர்தலை நடத்துவது தொடர்பில் அமைச்சரவை தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், அத்தீர்மானம் இதுவரை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை.

ஐக்கிய தேசிய கட்சியின் இத்தீர்மானத்தினை ஆதரிக்க போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது. இந்நிலையில், இது தொடர்பிலான தமது தீர்மானத்தை வெகு விரைவில் வெளியிடுவதாக சம்பந்தர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உரிய காலத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், தேர்தல் பிற்போடப்படுவதையும், காலம் தாழ்த்தப்படுவதையும் ஜனநாயகவாதிகள் என்ற அடிப்படையில் தாம் ஏற்கப்போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.