யாழ்- நெடுந்தீவினுடைய அபிவிருத்தி தொடர்பில் சகலரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்:சிறீதரன்

யாழ். நெடுந்தீவினுடைய அபிவிருத்தி தொடர்பில் சகலரும் அக்கறையுடன் செயற்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்டத்தில் மிகவும் பின் தங்கிய பகுதியாகக் காணப்படுகின்ற நெடுந்தீவில் போதிய வசதிகள் இன்மையால் அங்கு வாழ்கின்ற மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றார்கள்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

நெடுந்தீவு யாழ்ப்பாணத்தின் ஓர் பின் தங்கிய பகுதியாகக் காணப்படுகின்றது.இங்கே வாழ்கின்ற மக்கள் அடிப்படை மருத்துவ வசதி தொடக்கம் போக்குவரத்து வசதிகள் வரை பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றார்கள்.

இந்த மக்களினுடைய சேவைகளை நிறைவு செய்வதற்கும் அனைத்து அதிகாரிகளும் முன்வர வேண்டுமெனவும் குறிப்பாக கல்வி சார் விடயத்தில் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் பௌதீகத் தேவைகள் காணப்படுகின்றதுடன், குடிநீர் விநியோகம் மேலும் விஸ்தரிக்க வேண்டியுள்ளது.

குறிப்பாக இங்கு வாழ்கின்ற சிறார்கள் அதிகளவானோர் போசாக்குக் குறைபாடுகளுடன் காணப்படுவதாகவும் மருத்துவ ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

அந்தவகையில் இந்த சிறார்களின் போசாக்கு மேம்படுத்தப்பட வேண்டும் இந்தப் பகுதியில் விவசாயத்தில் ஈடுபடுவதற்கு விவசாயிகள் ஆர்வமாக உள்ளனர்.

விவசாயம் செய்வதற்கு அவர்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஊக்குவிக்க வேண்டும்.

தற்போது விவசாயத் திணைக்களம் மற்றும் கமநல அபிவிருத்தித் திணைக்களம் ஆகியோருடன் தொடர்பு கொண்டு இந்த மக்களுக்கு சேவைகளை வழங்குமாறு கடந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் குறிப்பிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தப் பின்தங்கிய பிரதேசங்களில் அபிவிருத்தி தொடர்பில் அக்கறையுடன் செயற்பட வேண்டும்.

மேலும், தற்போது நெடுந்தீவில் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்ற குமுதினி தவிர்ந்த வடதாரகை, நெடுந்தாரகை ஆகிய படகுகளில் நெடுந்தீவுப் பிரதேசத்தில் வாழுகின்றவர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் வழங்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குறிப்பிட்டுள்ளார்.