உள்ளூராட்சித் தேர்தலில் அரச ஊழியர்கள் போட்டியிடுவதை தடை செய்யக் கூடாது! – சம்பந்தன்

அரசாங்க ஊழியர்கள் உள்ளூராட்சி தேர்தல்களில் போட்டியிடுவதற்கு காணப்படும் சந்தர்ப்பம் நீக்கப்படக்கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தில் நேற்று வலியுறுத்தினார். உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்த) சட்டமூலம் தொடர்பான திருத்தங்களை குழுநிலையில் அங்கீகரிக்கும் போது கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் இதனைக் கூறினார்.

யாதேனும் உள்ளூராட்சி மன்றத்திற்குள் அமைந்துள்ள யாதேனுமொரு அரச நிறுவனத்தில் பணிபுரிவதை குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு முன்னதாக முடித்துக் கொள்ளாத யாதுமொரு நபருக்கும் அந்த உள்ளூராட்சி மன்றத்துக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு வழங்க முடியாது என்ற திருத்தத்தை அரசு முன்வைத்திருந்தது. எனினும், இதற்கு எதிரான திருத்த யோசனையொன்றை தினேஷ் குணவர்தன முன்வைத்தார். இதனால் சபையில் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து தினேஷ் குணவர்தனவுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டபோதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைக் கூறினார். இந்த நாட்டிலுள்ள அரச ஊழியர்கள் சில அரசியல் உரிமைகளை அனுபவிக்கின்றனர். சில நிபந்தனைகளுக்கு அமைய அவர்கள் தேர்தலில் போட்டியிடுவது என்றால் அவர்கள் விடுமுறையில் செல்ல வேண்டும்.

அதன் பின்னர் அவர்கள் பொது பதவிக்கு தெரிவு செய்யப்பட்டால் தங்களது அரச சேவையை கைவிட வேண்டும். ஆகவே, தேர்தலில் போட்டியிட விரும்பும் அரச ஊழியர்களின் அந்த தகுதியை தக்கவைப்பது நியாயமானதை தவிர வேறொன்றுமாகாது. அதை செய்ய அவர்களுக்கு அனுமதிக்க வேண்டும். இது பற்றி அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். தினேஷ் குணவர்தனவின் யோசனையை ஆதரித்து எதிர்க்கட்சித் தலைவர் கருத்துத் தெரிவித்திருந்தபோதும், தினேஷ் குணவர்தனவின் யோசனை வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கு எதிராக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.