பிரச்சினைகளை தீர்க்க நெருக்குதல்களே வழி: வடக்கு முதல்வர்

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் தொடர்பாக, இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேச நாடுகள் போதிய நெருக்குதல்களை ஏற்படுத்த வேண்டுமென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் உண்மையை வெளிப்படுத்துமாறு கோரி வடக்கு கிழக்கில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, அரசாங்கத்திற்கு வாய்மூலமும் எழுத்து மூலமும் பலதடவைகள் இவ்விடயம் தொடர்பாக எடுத்துக்கூறியும் எவ்வித ஆக்கபூர்வமாக நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லையென வடக்கு முதல்வர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் போனோர் தொடர்பாக ஏற்றுக்கொள்ளத்தக்க நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக சர்வதேசத்திற்கு வாக்குறுதி அளித்துள்ள போதிலும் நடைமுறையில் எவ்வித செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லையென தெரிவித்துள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரன், இலங்கைக்கு இரண்டு வருட கால அவகாசம் கொடுத்த சர்வதேச நாடுகள், காணாமல் போனோர் விவகாரத்தில் இலங்கைக்கு போதிய நெருக்குதல்களை ஏற்படுத்த வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.