இரணைதீவு மக்களின் காணியை வழங்க கடற்படையினருக்கு விருப்பமில்லை:நா உ சி.சிறீதரன்

கிளிநொச்சி, இரணைதீவு மக்களுக்கு சொந்தமான 189 ஏக்கர் நிலத்தை முதற்கட்டமாக மக்களிடம் மீள வழங்க கடற்படையினர் இணக்கம் காட்டியுள்ளமை இரணைதீவு மக்களுக்கு நன்மை பயக்கும் என கூறியிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், இரணைதீவு மக்களுக்கு சொந்தமான நிலத்தை மக்களிடம் முழுமையாக வழங்க கடற்படையினருக்கு பூரண விருப்பம் இல்லை எனவும் கூறியுள்ளார்.

1992ம் ஆண்டு இரணைதீவு மக்கள் தமது சொந்த நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்டதன் பின்னர் இரணைதீவு மக்கள் மீண்டும் தங்கள் நிலத்திற்கு திரும்ப முடியாத நிலையில் மாற்று இடங்களில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமது சொந்த நிலத்தை தம்மிடமே மீள வழங்கக் கோரி இரணைதீவு மக்கள் தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இலங்கை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் ஆகியோர் இன்றைய தினம் இரணைதீவுக்கு விஜயம் மேற்கொண்டு இரணைதீவு மக்களையும், கடற்படையினரையும் சந்தித்து பேசியுள்ளனர்.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் இன்றைய சந்திப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில்,

இரணைதீவில் 1200 ஏக்கர் நிலம் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதில் 189 ஏக்கர் நிலம் 189 குடும்பங்களுக்கு சொந்தமானது.

அந்த காணிகளை மக்களிடம் மீள வழங்குவதற்காக அவற்றை பிரதேச செயலர் தலைமையில் அளவீடு செய்ய கடற்படை இணக்கம் காட்டியுள்ளது.

இந்த பகுதியில் தொன்மையான தேவாலயம்,தபாலகம், வைத்தியசாலை போன்றனவும் உள்ளது.

இந்நிலையில் இன்றைய சந்திப்பில் இரணைதீவு ஊடா க கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாகவும், இரணைதீவில் ராடர் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது.

அது மக்களுக்கு ஆபத்தானது எனவும், இரணைதீவு ஊடாக சர்வதேச பயங்கரவாதம் நாட்டுக்குள் வருவதாகவும், இரணைதீவில் உள்ள ஒரு இறங்குதுறையை மக்களிடம் கொடுத்து விட்டு இன்னொரு இறங்குதுறை அமைப்பதால் கடல்வளம் பாதிக்கப்படும் எனவும் கடற்படையினர் கூறுகின்றனர்.

இவ்வாறு கடற்படையினர் கூறியிருக்கும் காரணங்கள் ஏற்றுகொள்ள முடியாதவையாகவே இருக்கும் அதேவேளை, இக்காரணங்கள் மக்களுடைய நிலத்தை மக்களிடம் மீள வழங்குவதற்கு அவர்களுக்கு விரும்பமில்லை என்பதையும் காட்டுகின்றது.

எனினும் முதல் கட்டமாக 189 ஏக்கர்நிலத்தை மக்களிடம் மீள வழங்குவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை தொடங்க கடற்படை இணக்கம் காட்டியுள்ளமை இரணைதீவு மக்களுக்கு நன்மை பயக்கும்.

காரணம் 1992ம் ஆண்டுதொடக்கம் இரணைதீவு மக்கள் பல்வேறு வாழ்வாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

எனவே முதற்கட்டமாக மக்களை அங்கே மீள்குடியேற்றினால் அதன் பின்னர் இரணைதீவில் உள்ள மக்களுடைய கால்நடைகள் மற்றும் பயன்தரு மரங்கள் போன்றவற்றை கடற்படையினரிடமிருந்து மீட்பது தொடர்பாக அடுத்த கட்டம் சிந்திக்கலாம்.

எனவே கூடியளவில் பெறக்கூடிய நிலத்தை பெற்று மக்களை மீள்குடியேற்றுவதையே மக்களும் விரும்புகிறார்கள் நாங்களும் அதனை ஏற்றுக்கொள்கிறோம்.

எனினும் தொடர்ச்சியாக மக்களுடைய நிலத்தை மக்களிடம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினை நாங்கள் முன்கொண்டு செல்வோம் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.