ஜனநாயக விரோதமாக காணப்படும் 20ஆவது திருத்தத்தை வடமாகாண சபை ஆதரிக்காது : சீ.வீ.கே.சிவஞானம் உறுதிபடத் தெரிவிப்பு

20 ஆவது திருத்தச் சட்டம் மாகாண சபையின் கால எல்லையைப் பறிக்க முயற்சிக்கின்றது என்று வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக வடமாகாண சபையில் இன்று வியாழக்கிழமை(07) இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ள நிலையில் இது தொடர்பாக வினாவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,20 ஆவது திருத்தச் சட்ட வரைபு அடிப்படையில் தவறானதொன்று. இந்தச் சட்ட வரைபு தொடர்பில் இன்று மாகாண சபையில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.இந்தத் திருத்தச் சட்டத்துக்கு நாங்கள் உடன்பட மாட்டோம். மாகாண சபையைக் கலைப்பதற்கான குறித்தொதுக்கப்பட்ட திகதி தெளிவாகச் சொல்லப்படாத நிலையில் 20 ஆவது திருத்தத்தை நாங்கள் எந்தக் காரணம் கொண்டும் ஏற்க முடியாது.இந்தத் திருத்தம் வெற்றுத் திருத்தமாகவும், ஜனநாயக விரோதமாகவும் காணப்படுவதால் எந்த வகையிலும் இந்தத் திருத்தத்தை நாங்கள் ஆதரிக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.20 ஆவது திருத்தச் சட்டம் மாகாண சபையின் பதவிக் காலத்தைப் பறிக்கின்றதே தவிர இந்தத் திருத்தம் எங்களுடைய அதிகாரங்களைப் பறிக்கின்றது என்பது பொருத்தமில்லாததொரு கருத்து.13 ஆவது அரசியலமைப்பின் படி ஒரு மாகாண சபையின் பதவிக் காலம் ஐந்து வருடங்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த அரசியலமைப்பு ஏற்பாட்டை மாற்றுவதற்காகவே 13 ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டு வருவதற்கு அரசாங்கம் முனைப்புக் காட்டுகின்றது.வட மாகாண சபையின் பதவிக் காலம் ஆரம்பிக்கப்பட்டுத் தற்போது நான்கு வருடங்களே பூர்த்தியாகின்ற நிலையில் குறித்தொதுக்கப்பட்ட திகதி எதிர்வரும் 2018 செப்ரெம்பர் மாதத்திற்கு முன்னதாகவும் வரலாம்.வடமாகாண சபையின் பதவிக்கால எல்லைக்குப் பின்னர் பதவிக் காலம் முடிவடையவுள்ள மேல் மாகாணம், ஊவா மாகாணங்கள் என்பன காணப்படுகின்றன.இவ்வாறான நிலையில் 20ஆவது திருத்தத்தில் அனைத்து மாகாண சபைகளின் பதவிக் காலத்தையும் குறிப்பாக எந்தக் காலப்பகுதியில் நீக்கவுள்ளதாகத் தெளிவாக எதுவும் குறிப்பிடப்படவில்லை.இதற்கான காரணம் என்ன? ஒரு நிலையில்லாத வகையில் மாகாண சபைகளின் பதவிக் காலத்தைப் பாராளுமன்றம் தான் தீர்மானிக்கும் என்று சொல்வதன் அர்த்தம் என்ன?ஒரு மாகாண சபையைக் கலைக்கும் அதிகாரம் ஆளுநருக்குள்ளது. இதற்கமைவாக மாகாண சபை கலைக்கப்பட்டால் பாராளுமன்றம் மாகாண சபையைப் பொறுப்பெடுக்க முடியும் என்ற ஏற்பாடுகளுமுள்ளது.ஆனால், எங்களுக்கு அந்த ஏற்பாடு தேவையில்லை. இவ்வாறான சந்தர்ப்பத்தில் பாராளுமன்றம் சட்டம் இயற்றலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும் இதன் போது எங்களுக்கு மாறான சட்டம் இயற்றலாம் என்ற குற்றச்சாட்டுமுள்ளது. ஆனால், மாகாண சபைகளின் பதவிக் காலத்தைப் பறிப்பதே முக்கியமானதாவுள்ளது.எங்களுக்கு அது தேவையில்லை. மாகாண சபைகளை விட வேறொரு அமைப்பு எங்களுடைய அதிகாரங்களைப் பறிப்பதற்கு நாங்கள் அனுமதிக்க வேண்டிய தேவையில்லை.இடைப்பட்ட காலத்தில் குறிப்பிட்ட காலத்திற்கு மாகாண சபையை ஆளுநர் நிர்வகிப்பது ஏற்கனவே நடைபெற்ற விடயம் என்பதனால் இந்த நடைமுறையை நாங்கள் எதிர்க்க வேண்டியதில்லை.20 ஆவது திருத்தம் தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் மெளனம் காத்து வருவது சரியான நிலைப்பாடு. மாகாண சபையில் 20 ஆவது திருத்தத்திற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றிய பின்னர் அவர் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவார் என நம்புகின்றேன் எனவும் வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்