இடைக்கால அறிக்கை: பரிந்துரைகளைப் பரிசீலிக்க கூட்டமைப்பு தயார்! – சுமந்திரன்

இடைக்கால அறிக்கை: பரிந்துரைகளைப் பரிசீலிக்க கூட்டமைப்பு தயார்! – சுமந்திரன் தெரிவிப்பு

புதிய அரசமைப்புக்கான வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கையில் பிரதானமாகக் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள், யோசனைகளின் அடிப்படையில் தீர்வை முன்னெடுப்பதற்குப் பிரதான இரு கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுந்திரக் கட்சியும் இணங்கி வருமானால் அவர்களோடு சேர்ந்து பொது இணக்கப்பாடு ஒன்றுக்கு வருவதற்காக அந்தப் பரிந்துரைகள் குறித்துப் பரிசீலிப்பதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயார் என்று பிரதானதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்தக் கட்சியின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கூறுகையில்,
“இடைக்கால அறிக்கையில் தீர்வுக்கு வழி செய்யும் விடயங்கள் அமைந்த ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அதேசமயம் ஒவ்வொரு கட்சியும் தனித்தனியாகத் தத்தமது மேலதிக நிலைப்பாட்டை
பின்னிணைப்பாகச் சேர்ப்பதற்காக ஒப்படைத்துள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தனது நிலைப்பாட்டை அறிக்கையாக ஒப்படைத்துள்ளது.
அந்த அறிக்கையில்,
* வடக்கு – கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் சமஷ்டி அடிப்படையில் அதிகூடிய அதிகாரப் பரவலாக்கலுடன் கூடிய ஒரு தீர்வு அவசியம்.
* மாகாண ஆளுநருக்குரிய அதீத அதிகாரங்கள் இல்லாமல் ஆக்கப்படவேண்டும்.
* மாகாணங்களுக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரங்கள் குறைக்கப்படாமலும், திருப்பி எடுக்கப்படாமலும், நாடாளுமன்றத்தினால் பிரயோகிக்கப்படாமலும் இருப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
* இதற்காக இரண்டாவது சபை ஒன்று நிறுவப்பட வேண்டும். அந்தச் சபைக்கு மாகாணங்கள் சார்பாகப் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படவேண்டும்.
* அரசமைப்பு விவகாரங்கள், சர்ச்சைகள், பொருள் கோடல் போன்றவற்றில் முடிவுகளை எடுப்பதற்காக அரசமைப்பு நீதிமன்றம் ஒன்று உருவாக்கப்படவேண்டும்.
இது போன்ற விடயங்கள் கூட்டமைப்பு ஒப்படைத்துள்ள அறிக்கையில் உள்ளன.
இந்த விடயங்கள் இடைக்கால அறிக்கையில் பின்னிணைப்பாக வரும்.
இந்தப் பின்னிணைப்புகளின் கருத்துக்களைவிட்டு விட்டு, பிரதான இடைக்கால அறிக்கையில்
கூறப்பட்டுள்ள அம்சங்களின் அடிப்படையில் தீர்வு குறித்துப் பரிசீலிப்பதற்கு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணங்குமானால், அந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில் தீர்வுக்கு முயற்சிப்பது குறித்துப் பரிசீலிப்பதற்கு நாங்களும் தயார்” – என்றார்.