சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த கூட்டமைப்பு

நாடாளுமன்றில் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய அரசியல் யாப்பு சம்பந்தமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பிலான அறிக்கை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கை கையளிக்கப்பட்ட நேர காலம் தொடர்பில் வெளிவரும் மாறுபட்ட தகவல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குறித்த அறிக்கை உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்ட தினம் தொடர்பில் தெளிவுப்படுத்தும் வகையில் ஊடக அறிக்கை ஒன்றை கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில், புதிய யாப்பின் இடைக்கால வரைபில் சேர்த்துக்கொள்ளப்பட இருக்கின்ற, பல்வேறு கட்சிகளின் நிலைப்பாடு சம்பந்தமான அறிக்கைகளை கட்சிகள் சமர்ப்பித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அறிக்கையானது தமிழ் தேசிய கூட்டமைப்பின் வழிநடத்தல் குழுவின் உறுப்பினர்களாகிய இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரின் கையொப்பத்துடன் கைளிக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் மாதம் 29ம் திகதி ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனால் அறிக்கை நேரடியாக கையளிக்கப்பட்டுள்ளதானக கூறப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 30ஆம் திகதி குறித்த அறிக்கையானது அரசியல் யாப்பு வழிநடத்தல் குழு செயலகத்திற்கும் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.