போர்க்குற்ற விசாரணை தொடர்பில் சிவாஜிலிங்கம் எடுத்துள்ள முடிவு

இலங்கை அரசாங்கம் போர்க்குற்ற விசாரணைகளில் ஈடுபடுமென்ற நம்பிக்கை இல்லாத நிலையில் சர்வதேச விசாரணைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தவுள்ளதாக வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.</p><p>ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 36ஆவது கூட்டத்தொடர் ஜெனீவா நகரில் நேற்று ஆரம்பமாகியுள்ள நிலையில் எதிர்வரும் 29ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.இந்தக்கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக வட மாகாணசபை உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையிலான ஐவர் கொண்ட குழுவினர் நேற்றிரவு கொழும்பிலிருந்து ஜெனீவா புறப்பட்டுச் சென்றுள்ளனர்

கூட்டத் தொடரில் இலங்கைத் தமிழ்மக்களின் சார்பாக வலியுறுத்தவுள்ள விடயங்கள் தொடர்பில் ஜெனீவா புறப்படுவதற்கு முன்னர் விசேடமாகக் கருத்துத்தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,அரசியல் கைதிகளின் விடுதலை, வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களின் விடுவிப்பு என்பன தொடர்பில் வலியுறுத்தவுள்ளதுடன், வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது வெளிப்படுத்துவோம்.குறிப்பாகக் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் அமைக்கப்பட்டுள்ள போதும் அதனால் பயன் எதுவுமில்லை என்ற விடயத்தையும் சுட்டிக்காட்டவுள்ளோம்.அத்துடன் இலங்கையில் அரசியல் தீர்வு கேள்விக்குறியாக இருக்கின்ற நிலமையையும் எடுத்துக்கூறுவோம். இதற்கு மேலதிகமாக மியன்மார் நாட்டில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் இனப்படுகொலைகள் தொடர்பாகவும் எமது கரிசனையை வெளிப்படுத்துவோம்.

குறிப்பாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உள்நாட்டு விசாரணை வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கி இடம்பெற வேண்டும் என இலங்கையால் வாக்குறுதி வழங்கப்பட்டு ஒன்றரை வருடங்கள் கடந்துள்ளன. ஆனால், இதுவரை எதுவும் இடம்பெறவில்லை.மீண்டும் இலங்கைக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கால அவகாசம் வழங்கப்பட்டு தற்போதுஆறு வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன.இந்த நிலையில் குறித்த விடயங்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பிரதான கூட்டத்திலும், பக்க அறைகளில் இடம்பெறும் கூட்டங்களிலும், இராஜதந்திரிகளுடனான சந்திப்புக்களின் போதும் நாங்கள் வலியுறுத்துவோம் என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இலங்கையில் போர்க்குற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை என இதுவரை காலமும் சொல்லப்பட்டு வந்த நிலையில் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, மேஜர் ஜெனரல் ஜகத் ஜெயசூரிய உட்பட 30 பேர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.இவ்வாறான சூழலில் இலங்கை அரசாங்கம் போர்க்குற்ற விசாரணைகளில் ஈடுபடுமென்ற நம்பிக்கை இல்லாத நிலையில் சர்வதேச விசாரணைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என நாம் வலியுறுத்தவுள்ளோம் என கூறியுள்ளார்.