வட மாகாணசபை கூறுவது எல்லாமே செவிடன் காதில் ஊதிய சங்கு போல மத்திய அரசு தோற்றுவித்துள்ளது

வட மாகாணசபை கூறுவது எல்லாமே செவிடன் காதில் ஊதிய சங்கு போல மத்திய அரசு தோற்றுவித்துள்ளது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் போரின் போது முற்று முழுதாக அழிக்கப்பட்ட மாகாணங்கள் என வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். அத்துடன், வட மாகாணசபை கூறுவது எல்லாமே செவிடன் காதில் ஊதிய சங்கு போலவே மத்திய அரசாங்கம் தோற்றிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.முல்லைத்தீவு – உடையார்கட்டு மகா வித்தியாலயத்தில் இன்று சிறுவர்கள் பகுதியின் சிமாட் வகுப்பு (Smart Class) திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு கட்டடத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கையில்,போருக்கு பின்னர் கல்வியிலும் பொருளாதாரத்திலும் மிக மோசமாக நாங்கள் வீழ்ச்சியடைந்துள்ளோம். கல்வியையும், பொருளாதாரத்தையும் மீண்டும் கட்டியெழுப்ப முடியாதவர்களாக நாங்கள் இருக்கின்றோம்.

இந்த நிலையில் இறந்தவர்களின் நினைவாக தூபிகள் கட்ட முடியாத சூழ்நிலை இக்கால அரசியலில் காணப்படுகின்றது. இறந்தவர்களின் நினைவாக எல்லோருடைய மனங்களிலும் பதியக்கூடிய ஒரு வரலாற்று நினைவாக இந்த கட்டடம் கட்டப்பட்டிருக்கின்றது யுத்தத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை கட்டியெழுப்புவதற்கு பல்லாயிரக்கணக்கான நிதி தேவைப்படுகின்றது. ஆனால் மத்திய அரசு நூற்றுக்காணக்கான நிதிகளையே வடக்கு மற்றும் கிழக்கிற்கு வழங்குகின்றது.

இதனால் தற்காலத்தில் எங்களுடைய பொருளாதாரத்தையும் சமூக அபிவிருத்தியை வளப்படுத்துவதற்கு வடக்கு மற்றும் கிழக்கிற்கு சிறப்பு வேலைத்திட்டம் ஒன்றை தரவேண்டும் என்று வட மாகாணசபை மீண்டும் மீண்டும் மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டே இருக்கின்றது. ஆனால் வட மாகாணசபை கூறுவது எல்லாமே செவிடன் காதில் ஊதிய சங்கு போலவே மத்திய அரசாங்கம் தோற்றிவித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.