நாங்கள் தமிழ் பேசும் மக்கள் என்ற அடிப்படையில் எமக்கு உரித்துக்களையும், உரிமைகளையும் நன் மதிப்பையும் கொழும்பு அரசிடம் இருந்து கேட்கின்றோம்.
நாங்கள் அதே உரித்துக்களையும், உரிமைகளையும் நன் மதிப்பையும் எம்மைச் சுற்றியுள்ள எம் மக்களுக்கு வழங்குகின்றோமா என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.
இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சா் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தாா்.
மாகாண மட்ட வணிக கண்காட்சியும், தொழில் சந்தையும் கிளிநொச்சியில் நேற்று நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே வடக்கு மாகாண முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தெரிவித்ததாவது;
“சமதளத்தில் ஒன்றாக” எனும் தொனிப்பொருளில் கண்காட்சி நடத்தப்படுகின்றது. சமநிலையில் அனைவரும் என்பதே அதன் பொருள். மாற்றுத் திறனாளிகளை சமநிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்பதே இந்தச் செயற்றிட்டத்தின் குறிக்கோள்.
அவர்களை வாழ்வாதார உதவிகள் மூலமாக தொழில் முனைவோராக அல்லது வர்த்தகர்களாக மாற்றம் பெறச் செய்வதன் மூலம் அவர்களையும் ஏனைய மக்களுக்குச் சமனான ஒரு சமநிலை அந்தஸ்த்தைப் பெறக்கூடியவர்களாக உருமாற்றம் பெறச் செய்யலாம் என்பதே இந்தச் செயல்திட்டத்தின் உத்தேசம்.
கடந்த கால போரின் காரணமாக நாம் பல இழப்புக்கள், கசப்பு உணர்வுகளுக்கு ஆளானோம். மாற்றுத் திறனாளிகளாக வலிந்து உருவாக்கப்பட்ட எமது இளைஞர் யுவதிகள் பல்லாயிரக்கணக்கில் எத்தனையோ சோகச் சுமைகளை மனதில் ஏந்தியவாறு எம்மிடையே வாழ்கின்றனர்.
அவர்களின் சோகச் சுமை பற்றி எம்மில் பலர் சிந்திப்பதில்லை. அவர்களை நாம் அரவணைத்து அன்பு பாராட்டி எம்முடன் அழைத்துச் செல்ல நாம் முன்வர வேண்டும்.
மாற்றுத் திறனாளிகள் தாம் பெற்ற பயிற்சிகளின் அடிப்படையில் அவர்களின் தொழிற்திறன் உற்பத்திகளை இன்றைய இந்த கண்காட்சி நிகழ்வுகளில் காட்சிப்படுத்தியிருக்கின்றார்கள்.
இதன் மூலம் மாற்றுத்திறனாளிகளின் வர்த்தகத்துக்கான உற்பத்திப் பொருள்களை அவற்றின் தரங்களை மக்கள் அறிந்து கொள்வதற்கும் அந்தப் பொருள்களின் தேவை உடனடியாக இல்லாது விட்டாலும் பிறிதொரு சந்தர்ப்பத்தில் அந்தத் தேவைகள் உணரப்படும் போது இந்த உற்பத்தியாளர்களை அணுகி அவர்களின் உற்பத்திப் பொருள்களை கொள்வனவு செய்து கொள்வதற்கும் இன்றைய கண்காட்சி வழிவகுக்கும்.
இது போன்ற நல்ல கைங்கரியங்களை ஆற்றுவதற்கு வலுவுள்ளவர்கள், சமூக அமைப்புக்கள், பணமுடையவர்கள் முன்வர வேண்டும். அதன் மூலம் மாற்றுத் திறனாளிகளை பிரித்துப் பார்க்கின்ற ஒரு நிலை இல்லாமல் ஆக்கப்பட்டு அவர்கள் அனைவரும் வல்லவர்களாக மாற்றப்பட வேண்டும்.
அந்த நல்ல நாளை விரைவில் வரச் செய்வதற்காக அனைவரும் உங்கள் உதவிக் கரங்களை நீட்டுங்கள் –- என்றார்.
Home News எமக்கு உரித்துக்களையும், உரிமைகளையும் நன் மதிப்பையும் கொழும்பு அரசிடம் இருந்து கேட்கின்றோம்- க.வி.விக்னேஸ்வரன்

எமக்கு உரித்துக்களையும், உரிமைகளையும் நன் மதிப்பையும் கொழும்பு அரசிடம் இருந்து கேட்கின்றோம்- க.வி.விக்னேஸ்வரன்
Sep 17, 2017
Previous Postஆட்சி மாற்றத்தினை முதலில் கோரியது தமிழரசுக்கட்சி: இரா.சம்பந்தன்!
Next Postதேர்தலை எதிர்கொள்ள தமிழ்க் கூட்டமைப்பு தயார்