ஆட்சி மாற்றத்தினை முதலில் கோரியது தமிழரசுக்கட்சி: இரா.சம்பந்தன்!

இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று முதன் முறையாக கோரிய கட்சி இலங்கை தமிழரசுக்கட்சிதான் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த 70 வருடங்களாக அந்த பாதையில் நாங்கள் தொடர்ந்திருக்கின்றோம். எந்த ஒரு அரசாங்கத்திடமும் நாங்கள் அமைச்சுப் பதவி கேட்கவில்லை.

1965 ஆம் ஆண்டு மாத்திரம் செனட் சபையின் உறுப்பினராக இருந்த திருச்செல்வம் அவர்கள் உள்ளூராட்சி மன்றங்களின் அமைச்சுப் பதவியை மாவட்ட சபைச்சட்டத்தை நிறைவேற்றுவதற்காக ஏற்றிருந்தார்.

அவரைத்தவிர மக்களினால் தெரிவு செய்யப்பட்ட எந்த ஒரு மக்கள் பிரதிநிதிகளும் தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக்கூட்டணி அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து அமைச்சுப் பதவியை ஏற்கவில்லை” என இரா.சம்பந்தன் தெரிவித்தார்.