அரசியல் கைதிகள் விவகாரம்: ஜனாதிபதி- எதிர்க்கட்சி தலைவர் சந்திப்பு

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், எதிர்க்கட்சி தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இடையே விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

வடக்கிலுள்ள அரசியல் கைதிகளின் பிரச்சினை குறித்து விவாதிக்கும் வகையில், இவ்வார இறுதிக்குள் இச்சந்திப்பு நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி தரப்பில் செய்திகள் வெளியாகியுள்ளன.

எதிர்க்கட்சித் தலைவரின் வேண்டுகோளுக்கு அமைவாகவே இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வார இறுதியில் இலங்கை ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார். அதன்போது, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

அதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி, குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடும் வகையில் அவர்களை கொழும்பிற்கு அழைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.