பேய்கள் வந்துவிடும் என்பதற்காக தமிழர்கள் தொடர்ந்தும் துன்பங்களைச் சுமக்கமுடியாது!

“பேய்கள், பிசாசுகள் வந்துவிடும் என்பதற்காகத் தமிழ் மக்கள் தொடர்ந்தும் துன்பம், துயரம், அவலத்தைச் சுமந்தபடி வாழமுடியாது. அவர்களது துயரத்துக்கு ஒரு தீர்வு விரைந்து எட்டப்படவேண்டும். இனியும் அவர்கள் காவல் இருக்கமுடியாது.”
– இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன்.

“தன்னைப் பலவீனப்படுத்தினால் உண்மையில் பலம் பெறப்போவது பேய்தான்” என்று யாழ்ப்பாணத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளமை குறித்து கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-
“தமிழ் மக்களின் அவலத்துக்கு ஒரு முடிவு கட்டுவதற்காக  தீர்வை எட்டுவதற்காகவே நல்லாட்சி அரசின் உதயத்துக்குத் தமிழ் மக்கள் உதவினார்கள்.
தெற்கில் பேய் வரும் பிசாசு வரும் என்பதற்காகத் தமிழர்கள் தொடர்ந்தும் அவலங்களை எதிர்கொண்டபடி வாழமுடியாது.
அதற்கு ஒரு முடிவு கட்டப்படவேண்டும்; தீர்வு விரைந்து எட்டப்படவேண்டும். அதுவே எமக்கு முக்கிய விடயம். பேய்வந்தாலும், பிசாசு வந்தாலும் தீர்வுக்கான முயற்சிகளை நாம் எடுப்போம்” – என்றார்.