இனப்பிரச்சினைக்கு இதயசுத்தியுடன் தீர்வைக் காண்பதை விடுத்து கட்லோனியா, குர்திஸ்தான், ஸ்கொட்லாந்து போன்று தமிழ் மக்களும் பொது வாக்கெடுப்பொன்றை நடத்தி பிரிந்து செல்லும் நிலைக்கு அரசு தமிழர்களைத் தள்ளுகின்றதா?
இவ்வாறு நேற்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்.
இலத்திரனியல் திருத்தச் சட்டவரைவு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார் அவர். அப்போதே இந்த விடயம் குறித்து அவர் பேசினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
போரின்போது தமிழர்கள் மிகவும் மோசமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். இந்தப் போரில் இரசாயன ஆயுதங்களும் கொத்துக் குண்டுகளும் இராணுவத்தால் பயன்படுத்தப்பட்ட ஆதாரங்கள் உள்ளன.
அதுமாத்திரமின்றி பிரபாகரனின் மகன்கூடச் சுட்டுக் கொல்லப்பட்டார். இவ்வாறான சம்பவங்களை இனங்காண்பதற்கு எந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினீர்கள்.
தொழில்நுட்பத்தின் வருகையின் பின்னரும் எமது பல பிரச்சினைகள் தீர்க்க முடியாமல் இருப்பது கவலையாகும்.
அமைச்சர் சரத் பொன்சேகாவும், உதய கம்மன்பிலவும் நாட்டில் அரசியல் கைதிகள் எவரும் இல்லை, அரசியல் கைதிகள் என்று கூறுபவர்கள் பயங்கரவாதிகள் என்று கூறியுள்ளனர்.
ஜெனிவாவில் தீர்வுகாண்பதற்கு விடுதலைப் புலிகளுடன் பேசும்போது அவர்கள் பயங்கரவாதி இல்லையா? போரின் போது விடுதலைப் புலி இயக்கத்தின் பிரதிநிதிகளுடன் முகமாலையில் சரத் பொன்சேகா கைகுலுக்கியபோது அவர்கள் பயங்கவாதிகளாகத் தெரியவில்லையா? நாட்டில் நடந்தவற்றை மூடி மறைக்க நினைப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
தமிழ் மக்களின் பிரச்சினைகள் அனைத்தும் வேறு திசைக்கு திருப்பபடுகின்றன. இவ்வாறான செயற்பாடுகள் தொடருமானால் இலங்கை பல விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.
உலக ரீதியாக அரசியலை நோக்கும்போது பிரிட்டனிலிருந்து அயர்லாந்து பிரிந்து தனிநாடாகச் சென்றது. அண்மையில் ஸ்பைனில் இருந்து கட்லோனியா பிரிந்து சென்றது. ஈராக்கில் இருந்து குர்திஸ்தான் பிரிந்து சென்றது.
தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்க்கத் தவறினால், அதற்கான சரியான பதிலை வழங்க தவறினால், எமக்கான நீதி கிடைக்காமல்போனால் கட்லோனியா, குர்திஸ்தான், அயர்லாந்து போன்று இலங்கையில் சிங்களவர்களும் தமிழர்களும் இணைந்து தொடர்ந்து வாழ்வதா என்பற்கான பொது வாக்கெடுப்பை நடத்த வேண்டிய நிலமை ஏற்படும் என்பதனை கூறிக்கொள்ள விரும்புகின்றேன் – என்றார்.