70 வருட கால தேசிய இனப்பிரச்சினை தீர்வதற்கான சந்தர்ப்பம் இது

தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பெறும் தருணத்தை எட்டியுள்ளோம். பிளவுபடாத நாட்டிற்குள் சமனான அதிகாரப்பகிர்வுகளை வலியுறுத்தியுள்ளோம். இதில் வெற்றியடைவதற்காகவே பயணித்துக்கொண்டிருக்கின்றோம். எமது வெற்றிக்கு மக்களின் ஆதரவு வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

யாழ்.நகரில் உள்ள அவரது வீட்டில் நேற்று முன்தினம் (03) புதிய அரசியலமைப்பு தொடர்பாக விளக்கமளிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு இடம்பெற்றது. இச் சந்திப்பின் போதே இவ்வாறு வலியுறுத்தினார்.

புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையின் விவாதம் கடந்த நான்கு நாட்கள் இடம்பெற்றன.

விவாதத்தின் போது, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா கொண்டு வந்த அரசியலமைப்பு வரைபை ஏற்றுக்கொள்வேன் என அமைச்சர் டிலான் கூறியதுடன், வரைபுக்கு ஆதரவு கொடுக்க வேண்டுமென்றும் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

அந்த வரைபுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளம் அமைச்சர்கள் ஆதரவளிப்பார்கள் என நினைக்கின்றேன்.

அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ளதாக மாற்றுவேன் என மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்கு எழுத்து மூலம் வாக்குறுதியளித்தவர்.

இப்பொழுது அதிகாரப்பகிர்வைத் தவிர்த்து மற்றவிடயங்களை செய்வோம் என்று பேசுவதில் இருந்து அவர்களின் நோக்கு எவ்வாறு இருக்கின்றது என்பது தெளிவு. சிங்கள மக்கள் மத்தியில் திரும்பவும் அச்சத்தை ஏற்படுத்தி, இந்த அரசியலமைப்பு உருவாக்கப்பட்டால் நாடு இரண்டாக பிளவடைந்து விடும் என்ற கருத்தை மீண்டும் மீண்டும் சிங்கள மக்கள் மத்தியில் சொல்லி, அச்சத்தை ஏற்படுத்தும் தந்திரோபாயத்தை கடைப்பிடிக்கின்றார்கள்.

இதுவரையில் நாட்டில் அவ்வாறான பயம் எழும்பவில்லை. அவ்வாறான ஒரு நிலைமையை ஏற்படுத்த பாடுபடும் மஹிந்த ராஜபக்சவுக்கு நாங்கள் உதவியாக இருந்து விடக்கூடாது.

எமது மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ள இந்தச் சூழ்நிலையில், மக்களின் கருத்துக்களை திடமாக சொல்லவேண்டி இருந்தாலும் கூட அவை தெற்கில் அச்சத்தை ஏற்படுத்தி விடக்கூடாது.

தெற்கில் பயப்படுவதற்கு நியாயமான காரணம் இருக்கின்றது. 3 தசாப்தங்களாக ஒரு தனிநாட்டிற்காக முன்னெடுக்கப்பட்ட போர் ஓய்ந்தது. அதனால் ஏற்பட்ட அச்சம் நீங்கிவிடும் என்று எதிர்பார்க்க முடியாது.

எமது மக்கள் எமக்குக் கொடுத்த ஆணை மிக மிகத் தெளிவானது. பிளவுபடாத நாட்டில் அதிகூடிய அதிகாரப் பகிர்வுடனான தீர்வு தான் எமது மக்கள் எமக்குக் கொடுத்த ஆணை. அவை அனைத்து விடயங்களையும் சேர்த்தே இந்த கருமத்தில் ஈடுபட்டிருக்கின்றோம்.

‘பிளவுபடாத நாடு’ என தமிழ் தேசிய கூட்டமைப்பே வலியுறுத்தியுள்ளது. நாடு பிளவுபடாமல் இருக்க வேண்டுமாயின், அதிகாரங்கள் முற்றுமுழுதாக பகிரப்பட வேண்டும். அவற்றை தெற்கில் உள்ள முதலமைச்சர்களும், அமைச்சர்களும் வலியுறுத்தியுள்ளார்கள்.

கொடுத்த அதிகாரப்பகிர்வுகளை மீளப்பெறக்கூடாது. அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். ஆளுநருக்கு அதிகாரங்கள் இருக்கக்கூடாது என்கின்ற கருத்துக்களும் இடைக்கால அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

70 வருட கால தேசிய இனப்பிரச்சினை தீர்வதற்கான சந்தர்ப்பம் இது. தீராமலும் விடலாம். தோல்வியில் முடிவடையலாம். அவ்வாறு தோல்வியில் முடிவடைவது, எமது செயற்பாட்டின் மூலம் தான் என எவரும் சொல்லாத வகையில், தான் இந்த விடயங்களில் ஈடுபட வேண்டும்.

வெற்றிகரமாக அமைவதற்கு அனைத்து முயற்சிகளும் எடுக்க வேண்டும். அரைவாசித் தூரத்திற்கு வந்திருக்கின்றோம். வந்த தூரத்தில் பெற வேண்டிய அரைவாசி விடயங்களையும் பெற்றிருக்கின்றோம்.

ஆகையினால், இவை தோல்வியில் முடிவடையுமென இப்போதே தீர்மானிக்கக்கூடாது. வெற்றியில் முடிவடைய வேண்டும். வெற்றியில் தான் முடிவடைய வேண்டுமென்ற நம்பிக்கையில் தான், செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம். எனவே, எமது மக்களின் பூரண ஆதரவு எமக்குத் கிடைக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.