மாவீரர் துயிலும் இல்லத்தை துப்புரவு செய்ய ராணுவம் அனுமதி மறுப்பு!

கிளிநொச்சி – விஸ்வமடு பகுதியிலுள்ள மாவீரர் துயிலும் இல்லத்தை சுத்தப்படுத்தச் சென்ற மக்களையும் மக்கள் பிரதிநிதிகளையும், அங்கு நிலைகொண்டுள்ள ராணுவம் திருப்பி அனுப்பியுள்ளது.

நேற்று குறித்த பகுதிக்கு வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான த.குருகுலராசா மற்றும் சு.பசுபதிப்பிள்ளை ஆகியோருடன் மக்களும் சென்றுள்ளனர்.

எனினும், அங்கு ராணுவ தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்ததோடு, குறித்த பகுதியில் தமது ராணுவ முகாம் அமைந்துள்ளதென்றும் அதற்குள் உட்செல்ல அனுமதிக்க முடியாதென்றும் கூறி திருப்பியனுப்பியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மாவீரர் துயிலும் இல்லத்தின் அருகில் உள்ள பற்றைக் காடுகளை வெட்டி அகற்றிய மக்கள், எதிர்வரும் 27ஆம் திகதி ராணுவ முகாமுக்கு அருகிலுள்ள காணியில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதாக கூறியுள்ளார்.

ராணுவத்தின் மறுப்பைத் தொடர்ந்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனும் அங்கு சென்று மக்களுக்கு ஆதரவு வழங்கியுள்ளார்.

எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், தமிழர் தாயக பகுதிகளிலுள்ள துயிலும் இல்லங்களில் மக்கள் சிரமதான நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர். இறந்த உறவுகளை நினைவுகூருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் கூறி வந்தாலும், ராணுவத்தின் அச்சுறுத்தல் தொடர்ந்தும் நீடிக்கின்றதென மக்கள் அங்கலாய்க்கின்றனர்.