குற்றத்தால் குறுகுறுக்கும் உங்கள் நெஞ்சங்கள் முன்வந்து எமக்குத் தருவனவற்றை நாம் எதிர்க்கவும் மாட்டோம்; ஏற்கவும் மாட்டோம். தொடர்ந்து எமது அடிப்படைக் கோரிக்கைகளை அவை கிடைக்கும் வரையில் நாங்கள் முன்வைத்துக்கொண்டே இருப்போம்.
அவற் றுக்காகப் போராடவும் தயங்க மாட்டோம். இத்தகைய அடிப்படையில்தான் எமது சிந்தனை அமைய வேண்டும். எமது அரசியல் அறிக்கைகளில் இருக்கும் அடிப்படை அரசியல் கோரிக்கைளில் இருந்து நாம் எப்போதுமே மாறப்போவதில்லை என்பதை வலுவாக அரசுக்கு எடுத்துக்கூறவேண்டிய கடப்பாடு எமது தலைவர்களுக்கு உண்டு. இதை எமது தலைவர்கள் செய்வார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.
இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். தமிழ் மக்கள் பேரவையின் நேற்றைய கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
பேச்சுக்களின்போது நாம் எமது கோரிக்கைகளை வலுவுடனும் திடமுடனும் எடுத்துக்கூற வேண்டிய கடப்பாடு எமக்குள்ளது. எம் உரிமைகள், உரித்துக்களைப் பறித்துக் கொண்ட பெரும்பான்மையினர் தாம் நினைத்தவாறு மாற்றங்களை ஏற்படுத்தி எமக்குரிய சலுகைகளை, உரிமைகளை, உரித்துக்களை திருப்பித் தருவதாக இருந்தால் அதற்கு நாம் ஆட்சேபணை தெரிவிக்கவும் தேவையில்லை. அவற்றை ஏற்கின்றோம் என்று கூறவேண்டிய அவசியமும் எமக்கில்லை.
அரசு தனது பெரும்பான்மைப் பலத்தை உபயோகித்துத் தாம் இதுவரை காலமும் செய்த அரசியல் பிழைகளை மனத்தில் வைத்து சில மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும் என்று நினைத்தால் அதற்கு நாம் எதிர்ப்புமில்லை; ஏற்புமில்லை.
எனினும் குறைவாகத் தருவனவற்றை நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம் என்ற அடிப்படையில் மேலும் எதுவும் தரவேண்டிய அவசியம் தமக்கில்லை என்று அரசு நினைத்துவிடக்கூடாது.
சிங்கள மக்கள் தலைவர்கள் அரசியல் அதிகாரங்கள் அனைத்தையும் பிரதேசவாரியான தேர்தல்கள் மூலம் பெரும்பான்மையினர்களுக்குப் பெற்று தம்வசம் அதிகாரங்களைக் கையகப்படுத்தியதனாலேயே எமது அரசியல் பிரச்சினையானது உருவானது.
தொடர்ந்தும் சர்வாதிகாரங்களும் தம் வசம் இருக்கவேண்டும் என்றும் அவற்றிலிருந்து எமக்கு சில அதிகாரங்களைப் பங்கிட்டுக்கொள்ள முன்வருவதாகவுமே அவர்களின் நடவடிக்கைகள் இன்று அமைந்துள்ளன.
தொடக்கத்தில் இருந்தே தமிழ் மக்கள் சுயநிர்ணய உரித்தைப் பெற்றிருந்தவர்கள் என்ற அடிப்படை உண்மையை அவர்கள் தட்டிக் கழிக்கப் பார்க்கின்றார்கள். அதிகாரப் பரவலாக்கம் என்பது பல்லினங்களின் ஒப்புதலோடு நடைபெறவேண்டுமே தவிர பெரும்பான்மையினரிடமிருந்து எமக்குத் தரப்படும் அவர்களின் கொடைச் சிந்தனையின் வெளிப்பாடாக இருக்கக்கூடாது. அவ்வாறு கொடைச் சிந்தனையின் வெளிப்பாடாகத் தருவனவற்றை நாங்கள் எதிர்க்கவும்கூடாது; ஏற்கவும் கூடாது.
நடைமுறைச் சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்த அரசு முன்வந்தால் அவற்றிற்கு நாம் எதிர்ப்புத் தெரிவிக்கமாட்டோம். ஆனால் நாங்கள் எங்களுடைய அடிப்படைக் கோரிக்கைகளில் இருந்து சற்றேனும் இறங்கிவரவும் மாட்டோம்.
சிங்களப் பெரும்பான்மையினர் தர முன்வரும் அரசியல் சலுகைகள் எம்மிடமிருந்து அவர்கள் ஏற்கனவே பறித்துக் கொண்டவையே தவிர அவர்களுக்குரிய உரித்துக்கள் அல்ல. இந்த அடிப்படையிலேயே நாம் அரசு தர இருக்கும் எந்த அரசியல் சலுகைகளையும் எதிர்நோக்கவேண்டும்.
எமது தலைவர்கள் அரசு தருவதை முறையான தீர்வு அல்லது முற்றுமுழுதான தீர்வு என்று ஏற்றுக் கொண்டார்களானால் பின்னர்; எம்மை அரசு குறை கூறும். நீங்கள் ஏற்றுக் கொண்டதைத்தான் நாம் ஏற்கனவே தந்துவிட்டோமே. பின் எதற்காக மேலும் உரித்துக்கள், உரிமைகளைக் கோருகின்றீர்கள் என்று எம்மிடம் கேட்பார்கள். இந்த நிலை வர இடமளிக்கக் கூடாது – என்றார்.