தமிழ் மக்களின் எதிர்காலத்திற்காக ஒற்றுமையுடன் செயற்படுவோம்:!!

தமிழ் மக்களின் எதிர்காலத்திற்காக பல தியாகங்களைச் செய்து ஒற்றுமையுடன் செயற்படுவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கைத் தமிழரசுக்கட்சி ஒற்றுமைக்காக மௌனமாக இருந்து வருகின்றது. அதனால்தான் எமது கட்சி குறித்து பல விமர்சனங்களும் பல கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இருந்தாலும் தமிழ் மக்களது எதிர்காலம் குறித்த நம்பிக்கைகள் தொடர்பாக மிகக்கூடியளவு மௌனத்துடன் மக்களது ஒற்றுமைக்காக பல தியாகங்களைச் செய்து செயற்பட்டு வருகின்றோம்.

அத்துடன், இடைக்கால வரைபை மட்டும் வைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றாமல் ஒரு அரசியல் யாப்பின் முழுமையான வடிவம் வந்த பின்னரே அது குறித்த தெளிவான விளக்கத்தினை மக்களுக்கு வழங்கவுள்ளோம்.

மேலும் இன்றைய கூட்டத்தில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக்கட்சி மற்றும் பங்காளிக்கட்சிகள் எவ்வாறு ஒற்றுமையுடன் எதிர்வரும் தேர்தலில் பங்கு கொள்ளலாம் எனவும் விரிவாக ஆராயப்பட்டது” என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மேலும் தெரிவித்துள்ளார்.