தமிழ் மக்கள் பேரவை கட்சியாக இயங்க முடியாது – அது மக்களின் இயக்கம்

தமிழ் மக்கள் பேரவை கட்சியாக இயங்க முடியாது. மக்களின் இயக்கம் அது அவ்வாறே செயற்படுமென வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

எதிர்வரும் உள்ளுராட்சி சபை தேர்தல் தொடர்பாக தமிழ் மக்கள் பேரவையின் வடகிழக்கு உறுப்பினர்கள் நேற்று (12) யாழ். பொது நூலகத்தில் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

அந்த கலந்துரையாடலின் போது, எதிர்வரும் உள்ளராட்சி தேர்தலில் புதிய கட்சி ஒன்று ஒருவாக்கப்பட்டு அதனூடாக உள்ளுராட்சி தேர்தலை எதிர்கொள்வதென பல கருத்துக்கள் வெளிவந்தன.

இந்நிலையில், எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் புதிய கட்சி ஒன்று உருவாக்கப்பட்டு அதனூடாக தேர்தலை எதிர்கொள்வதாக தமிழ் மக்கள் பேரவையில் உள்ள சில உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். அவ்வாறு புதிய கட்சி உருவாகவுள்ளதா, தமிழ் மக்கள் பேரவை புதிய கட்சியாக மாறுமா என முதலமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு பதிலளித்த முதலமைச்சர், தமிழ் மக்கள் பேரவை மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு இயக்கம். ஆந்த இயக்கத்தினை அரசியல் கட்சியாக உருவாக்க முடியாது. அவ்வாறு உருவாகவும் இடமளிக்க முடியாது. உள்ளுராட்சி தேர்தலின் போது தேர்தல் தொடர்பான செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கும்.

நடைபெறவுள்ள உள்ளுராட்சி தேர்தலில் நல்ல தகைமையுடையவர்களை தெரிவு செய்ய வேண்டும். அதற்காக கட்சிக்காக உழைப்பவர்களையும், தங்களுடன் சேர்ந்திருப்பவர்களையும் மாத்திரம் இணைக்காது, அந்தந்த துறைகளில் சேவையாற்றக் கூடியவர்களை தெரிவு செய்து இணைத்துக்கொள்ள வேண்டும். உள்ளுராட்சி மன்றத் தவிசாளர்களுக்கென சட்டப்படியான குணாம்சங்கள் உள்ளன. அந்த சட்டப்படியான குணாம்சங்களுக்கு ஏற்றவர்களை நியமிக்க வேண்டும். அதைவிடுத்து கட்சி ரீதியாக எமக்கு சேவை செய்பவர்கள் என இணைக்கக்கூடாது.

வடமாகாணத்தில் உள்ள பட்டதாரிகள் மற்றும் இளைஞர், யுவதிகள் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் இணைக்கப்பட வேண்டும். ஆத்துடன் தமிழ் மக்களின் அடிப்படை உரித்துக்களை ஏற்றுக்கொண்ட சமூதாயத்தினை தேர்தலில் உள்ளடக்க வேண்டும். எனவே, உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தமிழ் மக்கள் பேரவை அனுசரணைகள் வழங்குமே தவிர அரசியல் கட்சியாக மாறுவதற்கு இடமில்லை என்றும் முதலமைச்சர் உறுதிபட தெரிவித்தார்.

இந்நிலையில், தமிழ் மக்கள் பேரவை ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் டிசம்பர் மாதம் 2 வருட பூர்த்தியை எட்டவுள்ள நிலையில் தமிழ் மக்கள் பேரவை இந்த கலந்துரையாடல் முன்னெடுத்துள்ளதாகவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.