கூட்டமைப்பின் பொறுமைக்கும் எல்லையுண்டு!

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பில் கூட்டாட்சி அரசு 93 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளமை அதன் பலத்தை எடுத்துக் காட்டியுள்ளது.

அரசுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஈ.பி.டி.பி ஆகிய தமிழ்க் கட்சிகள் வாக்கெடுப்புக்கு ஆதரவாக வாக்களித்திருந்தன.

மகிந்த தலைமையிலான கூட்டு எதிரணியுடன் ஜே.வி.பி மட்டுமே இணைந்து எதிராக வாக்களித்தது. ஜே.வி.பியின் இந்த நிலைப்பாட்டை மகிந்தவுக்கு ஆதரவானதொரு நிலைப்பாடாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

மாறாக அரசுக்கு எதிரானதொரு செயற்பாடாகவே கருத வேண்டும். இதேவேளை எதிர்க்கட்சித் தலைமைத்துவத்தைக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறையும் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தமை கவனத்தில் கொள்ளத்தக்கது.

இதற்கான சூழ்நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும். அரசுக்கு விடுத்துள்ள நல்லெண்ணச் சமிக்ஞையாகவே இதைப் பார்க்க வேண்டும்.

கூட்டு அரசை வீட்டுக்கு அனுப்பி வைப்பதற்கு கூட்டு எதிரணியினர் எதைச் செய்வதற்கும் தயாராகவுள்ள இன்றைய நிலையில், வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பில் அரசு பெரும் வெற்றியீட்டியுள்ளமை முக்கியமானதொரு திருப்பத்தை ஏற்படுத்தி விட்டது.

முக்கியமான வேளையில் முதன்மைத் தமிழ்க் கட்சிகள் அரசைக் கைவிட மாட்டா என்பதும் இதன் மூலம் நிரூபிக்கப்பட்டு விட்டது.

புதிய அரசமைப்பின் உருவாக்கம் தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் சூடு பிடித்துக் காணப்படுகின்றன. மகிந்த தரப்பினர் இதை முற்றாகவே நிராகரித்து விட்டனர். இது நிறைவேற்றப்பட்டால் நாடு பிளவடைந்து போய் விடுமென இவர்கள் கூறியுள்ளனர்.

மகிந்த ராஜபக்ச, கூட்டு அரசை வீட்டுக்கு அனுப்புவதற்கானதொரு துருப்புச் சீட்டாகவே இதைக் கருதுகிறார். ஆனால் தேவையான ஆதரவைத் திரட்டுவதற்கு இதுவரை அவரால் முடியவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய அரசமைப்பின் ஊடாகத் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்குமென நம்புகின்றது. மக்களிடம் இதையே திரும்பத் திரும்ப கூறி வருகின்றது.

கூட்டமைப்புக்கு எதிரானவர்கள் இதை மறுப்பதிலேயே கண்ணும் கருத்துமாய் உள்ளனர். புதிய அரசமைப்பு நிறைவேற்றப்பட்டு விடக் கூடாது என்பது இவர்களது பிரார்த்தனையாகவும் உள்ளது.

தற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் கூட்டமைப்பு வழங்கிய ஆதரவை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். போரினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண்பதில் மனப்பூர்வமாகவும் அதிக ஈடுபாட்டுடனும் செயற்பட வேண்டும். வெறும் சாக்குபோக்கைக் கூறுவதால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை.

அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரச தலைவர் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலளிக்கும் விதத்தில் பதில் கூறவில்லை என்றே கூற வேண்டும்.

கடந்த காலத்தில் இடம்பெற்ற நடவடிக்கைகளுக்கும் தற்போதைய அரசு தான் பதில் கூற வேண்டும். பிரச்சினைகளுக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்து உரிய தண்டனையை வழங்க வேண்டும்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தவிர்ந்த ஏனைய கட்சிகள் அரசுடன் இணைந்து செயற்படுகின்றன. ஆறுமுகம் தொண்டமான் மதில் மேல் பூனை போன்றதொரு நிலையில் காணப்படுகின்றார். இவர் வசதிக்கேற்றவாறு மகிந்த பக்கமும் தாவக் கூடியவர்.

இதைப் போன்று தான் ஈ.பி.டி.பியின் தலைவரின் நிலையும் காணப்படுகின்றது. எது எப்படியிருந்த போதிலும் இவர்கள் அரசுக்கு ஆதரவு வழங்கியதைப் பாராட்டியே ஆக வேண்டும்.

நாட்டில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் இடம்பெறவுள்ள நிலையில் அரசு தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய நிலையில் உள்ளது. இதில் வெற்றி பெற்று விட்டால் மகிந்த தரப்பினர்கள் வாயை மூடிக் கொண்டு இருக்க வேண்டிய நிலை உருவாகி விடும்.

இதற்கு மாறாக அரசு தோல்வியைத் தழுவினால் எதிரணியினர் பலம் பெற்று விடுவார்கள். அடுத்து ஆட்சியைக் கலைப்பதற்கான வேலைகளிலும் ஈடுபட முனைவார்கள்.

தமிழர் பகுதியைப் பொறுத்தவரையில் கூட்டமைப்பு வெற்றி பெறுவது உறுதியாகி விட்ட போதிலும் சில எதிர்ப்புக்களையும் சந்திக்க நேரிடும். மக்கள் தமது பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுத் தரத் தவறி விட்டதாகக் கூட்டமைப்பைக் குறை கூறுகின்றனர்.

எதிரணியினர் இதையே காரணமாகக் காட்டி கூட்டமைப்புக்கு எதிராக மக்களைக் தூண்டி விடுகின்றனர். இதில் கூட்டமைப்புக்கு உதவ வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது. புதிய அரசமைப்பை எப்பாடுபட்டாவது அரசு நிறைவேற்றியே தீர வேண்டும்.

தமிழர்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண்பதில் இனியும் காலத்தை வீணாக்கக் கூடாது. தமிழர்களும் இந்த நாட்டின் பிரசைகளே என்பதை முழுமையாக ஏற்றுக்கொண்டு அவர்களும் நிம்மதியாக வாழ்வதற்கு அரசு ஆவன செய்ய வேண்டும்.

இவையெல்லாம் நிறைவேற்றப்படாதவிடத்து கூட்டமைப்பு தொடர்ந்து அரசுக்கு ஆதரவை வழங்குவது அர்த்தமற்றதாகி விடும். மக்களும் இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.