சம்பந்தனின் நேரடி தலையீட்டால் வடக்கு போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு

இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய முகாமையாளரையும், வட பிராந்திய பாதுகாப்பு முகாமையாளரையும் இடமாற்றக்கோரி கடந்த 28ஆம் திகதியிலிருந்து இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கின் ஏழு சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விடயம் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் தலையீட்டால் எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுடன் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று விசேட கூட்டம் ஒன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் வடக்கு போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து போக்குவரத்து அமைச்சர் இலங்கைப் போக்குவரத்துச் சபையின் தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு இது குறித்து கலந்துரையாடியுள்ளார்.

அதையடுத்து “இலங்கைப் போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய பிரதான முகாமையாளர் உபாலி கிரிவத்துடுவவை அந்தப் பதவியிலிருந்து உடனடியாக இடம் மாற்றப்பட்டு வடபிராந்திய பிரதான முகாமையாளராக கேதீஸ் நியமிக்கப்படுவார்” என இலங்கைப் போக்குவரத்துச் சபையின் தலைமையகம் இன்று நண்பகல் வாக்குறுதி வழங்கியது.

இதையடுத்து எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு பிராந்திய ஊழியர்களுடன் தொலைபேசியில் உரையாடியதைத் தொடர்ந்து குறித்த போராட்டம் கைவிடப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.