சிறந்த தலைவர் பிரபாகரனே! ஞானசார தேரரின் கூற்று தொடர்பில் யோகேஸ்வரனின் கருத்து

இந்த நாட்டில் தமிழர்களின் சிறந்த தலைவர் பிரபாகரன் என்பதை பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கூறியிருப்பது இந்த மண்ணில் தமிழர்கள் சிறந்து இருக்கின்றார்கள் என்பதை எடுத்துக் காட்டுகின்றது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனை பொலிஸ் நிலைய சந்தியிலுள்ள எல்லாளன் பேருந்து தரிப்பிடம் திறந்து வைக்கும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

இந்த நாட்டில் தமிழர்களின் சிறந்த தலைவர் பிரபாகரன் என பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் பௌத்த பிக்கு தெளிவான கருத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த நாட்டின் தமிழன் எந்தளவில் இருக்கின்றான் என்பதை அவர் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளார். பௌத்த தீவிரவாத பொதுபலசேனா அமைப்பின் செயலாளரே கருத்து வெளியிடும் அளவிற்கு இந்த மண்ணில் தமிழர்கள் சிறந்து இருக்கின்றார்கள்.

கண்கெட்டபின் சூர்ய நமஸ்காரம் செய்திருக்கின்றார் அவர், இப்போதுதான் சிங்களவர்களுக்கு தலைவர் பிரபாகரனின் தன்மை தெரிந்திருக்கின்றது, எல்லாளன் சிறந்த வீரன் அவரது பெயரில் பேருந்து தரிப்பிடம் திறந்து வைத்ததில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.

இந்த பேருந்து தரிப்பிடம் அமைப்பதற்கும் முச்சக்கரவண்டி தரிப்பிடம் அமைப்பதற்கும் பல்வேறு வழிகளில் கட்சி பேதமின்றி ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த ஒற்றுமை தமிழ் மக்கள் சார்பாக நடக்கின்ற பிரச்சினைகளில் செயற்படுத்தப்பட வேண்டும்.

தமிழ் மக்களாகிய எங்ளிடத்தில் ஒற்றுமை இல்லாத காரணத்தினால்தான் எங்களை சீரழிக்க பலர் முற்படுகின்றனர், வாகரை, வாழைச்சேனை, கிரான், செங்கலடி பிரதேச செயலகங்களில் தமிழ் மக்களின் காணிகள் பல சுவீகரிக்கப்படுகின்றன.

தமிழ் மக்களின் காணிகள் திட்டமிட்டு சுவீகரிக்கப்படுகின்றது, திட்டமிட்ட சதி முயற்சி நடைபெறுகின்றது, ஆனால் தலைவர் பிரபாகரன் காலத்தில் இவ்வாறெல்லாம் நடைபெறவில்லை, எங்களை அடிமையாக்கும் முயற்சியை நாங்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் தமிழ் மக்களுக்குரிய முச்சக்கரவண்டி தரிப்பிடத்தைத் தரவில்லை, ஏனைய இனத்தவர்களும் சேர்ந்த முச்சக்கரவண்டி தரிப்பிடமாக மாற்ற செயற்பட்டார்.

இங்கு இடம்பெற்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தமிழ் இளைஞர்களுக்கு முச்சக்கரவண்டி தரிப்பிடத்தை வழங்க வேண்டும் என்று அவர் கூறியிருக்க வேண்டும், இந்த தரிப்பிடம் கிழக்கு மாகாண சபையின் கீழ் உள்ளது.

கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 11 ஆசனங்களைப் பெற்றுத்தான் வந்தார், இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள் இந்த விடயத்தில் கரிசனை காட்டியது குறைவாகவே காணப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.