ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டவுடன் தனிநாட்டுக் கோரிக்கையும் அத்துடன் மௌனிக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த எண்ணத்தைச் சிலர் இன்னமும் தம் உள்ளங்களில் சுமந்து கொண்டிருக்கின்றார்கள். அதனால் நாட்டு மக்களிடையே சுமுக உறவு ஏற்பட முடியாது.
இவ்வாறு தெரிவித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.
வடக்கு முதலமைச்சர் நேற்று அனுப்பியுள்ள கேள்வி – பதில் வடிவிலான ஊடக அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“எமது மக்கள் தனிநாடு கோருவதையும், அதற்காக உணர்ச்சி மேலிட உரத்துக் கத்துவதையும் இனி நிறுத்த வேண்டும். அப்படியான கருத்துக்கள் அரசைப் பலமடையச் செய்யுமே தவிர எம்முடன் சுமுகமாக நடத்து கொள்ள உதவாது.”- என்று அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு -– கிழக்கு இணைப்பு என்பது தனிநாட்டை உருவாக்க நாம் செய்யும் சதி என்று அரசு பிற நாடுகளின் இராஜதந்திரிகளுக்குக் கூறுகின்றது. பன்னாட்டுச் சமூகத்தின் கருத்துக்கள் வடக்கு – கிழக்கு இணைப்புக்கு எதிராகவே இருக்கின்றது.
தனிநாடு என்பது பிற வல்லரசுகளின் தயவுடனே இயற்றப்பட முடியும். நாம் கேட்டுப் பெறக் கூடியதல்ல. அடித்துப் பறிக்கமுடியும் என்ற கருத்தும் அண்மையில் மௌனிக்கப்பட்டுவிட்டது. தனித்து நாம் வாழ முற்பட்டால் பிற நாடுகளின் சார்பானவர்களாகவே மாற வேண்டும்.
மாறாத பகைமையை சிங்கள சகோதரர்களுடன் பாராட்ட வேண்டிய நிலை ஏற்படும். தனிநாட்டுக் கோரிக்கையால் நாட்டு மக்களிடையே சுமுக உறவு ஏற்பட முடியாது என்பதை எம்மவர்கள் ஆய்ந்துணர வேண்டும்.
எமது மக்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு எமது நிலையறியாது பேசுவதை நிறுத்த வேண்டும். இங்கு இன ஒன்றுமை வளர இடம்கொடுக்க வேண்டும் என்றும் அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, கடந்த புதன்கிழமை வடக்கு மாகாண முதலமைச்சரை இலங்கைக்கான ஆஸ்திரேலியத் தூதுவர் சந்தித்தித்துக் கலந்துரையாடினார்.
அந்தச் சந்திப்பில் வடக்கு முதலமைச்சர், “ஆஸ்திரேலியா போன்ற கூட்டாட்சி அதிகாரப் பகிர்வையே தமிழ் மக்கள் கோருகின்றனர். அதை தமிழர்களுக்கு வழங்கினால் தனிநாடாகப் பிரிந்து சென்று விடுவார்களோ என்ற ஐயப்பாடு தென்னிலங்கை ஆட்சியாளர்களிடம் உண்டு. கூட்டாட்சித் தீர்வை வழங்காது விட்டால் தனிநாடு கோரும் அவசியம் தமிழர்களுக்கு ஏற்படும்.”- என்று ஆஸ்திரேலியத் தூதுவரிடம் கூறியிருந்தார்.