மாவீரர் துயிலும் இல்லத்தை நிர்மாணிக்க 40 இலட்சம் ரூபா நிதி

கிளிநொச்சி, கனகபுரம் பிரதேசத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லம் சேதமடைந்துள்ளதால், இம்முறை மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க புதிய மாவீரர் துயிலும் இல்லத்தை நிர்மாணிக்க நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் 40 இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்கான செலவுகளின் கீழ் இந்த நிதியை வழங்க கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அனுமதி பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன், கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தை நிர்மாணிக்க கரைச்சி பிரதேச செயலகம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் அனுமதியும் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்ட அமைப்பு என்பதால், அவர்களின் மயானத்தை நிர்மாணிக்க அனுமதி வழங்கப்பட்டமை பிரச்சினைக்குரியது என பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2009 ஆம் ஆண்டு கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் 97 கல்லறைகள் இருந்தாகவும் ஆரம்பத்தில் இருந்தவாறே துயிலும் இல்லம் நி்ர்மாணிக்கப்படும் எனவும் நேற்று பணிகளை பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கூறியுள்ளார்.