வடக்குஇ கிழக்கு மாகாணங்களில் எவ்வித தடைகளுமின்றி மாவீரர்களுக்கு அஞ்சலி: பா.உ யோகேஸ்வரன்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எவ்வித தடைகளுமின்றி உணர்வுபூர்வமாக மக்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர், இது நல்லாட்சி அரசாங்கத்தின் நல்லெண்ண செயற்பாட்டின் வெளிப்பாடாகவே நான் கருதுகின்றேன் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து மட்டக்களப்பு ஏறாவூர்பற்று பிரதேசத்திற்குட்பட்ட விளையாட்டு கழகங்கள் மற்றும் சமூக அமைப்புக்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

மாவீரர் தினத்தை வடக்கு, கிழக்கு பகுதிகளில் பரிபூரணமாக அனுஸ்டிப்பதற்கு தடை விதிக்காதமை நல்லாட்சி அரசாங்கத்தின் நல்லெண்ணப்பாங்கே தவிர இலங்கையிலுள்ள தமிழ் மக்களுக்கு சகல சலுகைகளையும் வழங்கி விட்டோம் என்று சர்வதேசத்திற்கு காட்டும் செயலாள அமைந்துவிடக்கூடாது.

மாவீரர்களை நினைவு கூருவது சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாகும், 1983ஆம் ஆண்டுகளில் நாட்டில் பெரும் கிளர்ச்சியை மேற்கொண்டு மக்கள் விடுதலை முன்னணியினர் உயிரிழந்த அனைத்து வீரர்களையும் வருடா வருடம் நினைவு கூருகின்றனர்.

அதேபோன்று இந்த நாட்டின் தேசிய இனமாக இருக்கின்ற தமிழர்கள் மாவீரர்களாக இந்த மண்ணில் விதைக்கப்பட்ட தமது உறவுகளை நினைவுகூருவதற்கு அனுமதி வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.

நல்லாட்சி அரசு அந்த கடமையைச் செய்துள்ளது, இந்த நடைமுறை தொடர்ந்து இருக்க வேண்டும், ஆட்சிகள் மாறலாம் மாவீரர் தினத்தை மக்கள் அனுஸ்டிப்பதில் மாற்றம் கொண்டு வரக்கூடாது, தடை செய்யக்கூடாது.

கடந்த காலங்களில் படையினர் பல வழிகளிலும் இதனைத் தடுத்தனர், இந்த வருடம் உணர்வு பூர்வமாக அனுஸ்டிப்பதற்கு எவ்வித தடைகளும் ஏற்படுத்தப்படவில்லை, இதேபோன்று இனிவரும் காலங்களிலும் மாவீரர் தினம் அனுஸ்டிப்பதற்கு அரசு எந்த தடையும் விதிக்கக் கூடாது என குறிப்பிட்டுள்ளார்.