இனவாதமும், மதவாதமும் நாட்டில் இருந்து களைந்தெறியப்பட வேண்டும்

இனவாதமும், மதவாதமும் இந்த நாட்டில் இருந்து களைந்தெறியப்பட்ட வேண்டும், தன்னைப்போல் பிறரை பார்க்காத நேசிக்காத தன்மை இந்த நாட்டில் இருந்ததன் காரணத்தினாலேயே வடக்கு, கிழக்கு இன்று யுத்த வடுக்களை தாங்கி நிற்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு பயனியர் வீதியில் உள்ள மதர்ஸ் கெயார் முன்பள்ளியின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் விடுகை கோள் விழாவும் நேற்றைய தினம் இடம்பெற்றது.

மதர்ஸ் கெயார் முன்பள்ளியின் அதிபர் நிர்ஜா ஜேசுதாசன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த கால யுத்தத்தினால் புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் உமது உறவுகளின் பிள்ளைகள் அங்குள்ள வெள்ளையர்களை பின்தள்ளி பல்வேறு துறைகளில் சாதனைகளை படைத்துவருகின்றனர்.

வாய்ப்புக்கள் கிடைக்கும் போது அதனை சரியாக பயன்படுத்துகின்றார்கள், அங்கிருக்கின்ற கல்வி முறைகளை இங்கு அறிமுகப்படுத்தவேண்டும். ஒட்டுமொத்தத்தில் எமது கல்விமுறை மாற்றப்படவேண்டும்.

நாங்கள் கல்வியால் வளர்ந்த கல்வியால் அடையாளப்படுத்தப்பட்ட சமூகமாவோம், தமிழர்களாகிய நாங்கள் கல்வியால் முழு இலங்கையையும் ஆண்டோம். தனி ஈழம் கேட்டு, வடக்கு கிழக்கு கேட்டு இன்று அதுவும் இல்லாத நிலையில் இருக்கின்றோம்.

இங்கையில் சகல அரசாங்க துறைகளிலும் எமது தமிழர்கள் இருந்தார்கள், மீண்டும் நாம் கல்வியால் எமது இருப்பை நிலைநிறுத்த வேண்டும், கல்வியாலும் பொருளாதார வளர்ச்சியிலும் மட்டுமே ஒரு சமூகத்தின் இருப்பை ஒரு தேசத்தில் தக்கவைத்துக்கொள்ள முடியும்.

பிள்ளைகளுக்கு நாங்கள் சரியான கல்வியை வழங்க வேண்டும், மறுக்கப்படுகின்ற கல்வி பறிக்கப்படுகின்ற உயிருக்கு சமமாகும், பெற்றோர்கள் தான் பிள்ளைகளுக்கு உன்னால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை கொடுக்க வேண்டும்.

ஒரு பிள்ளையின் திறமை சரியான முறையில் அடையாளப்படுத்தப்பட்டு அந்த துறையில் அவர் செல்ல அனுமதிக்கப்படுவாரானால் அவர் அதில் சாதனையாளராக மாற்றம் பெறுவார்.

கல்வியுடன் இணைந்ததாக ஒழுக்கமும் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும், இது மிக முக்கியமானதாகும், இந்த நாட்டை காலணித்துவ ஆட்சிக்கு பின்னர் மாறி மாறி ஆண்டுவந்த தற்போது ஆண்டுகொண்டிருக்கின்ற அரச தலைவர்கள் எல்லாம் இனவாதிகள், மதவாதிகள்.

தங்களது சுயலாபத்திற்காக இனவாதத்தினையும், மதவாதத்தினையும் விதைப்பவர்கள் அவர்கள்.

இதன்காரணமாகவே இந்த நாட்டில் அகிம்சை போராட்டம் ஆயுதப்போராட்டத்திற்கு சென்று இன்று அரசியல் போராட்டத்திற்கு வந்துள்ளோம், இனவாதம் என்பதும் மதவாதம் என்பதும் இந்த நாட்டில் இருந்து முழுமையாக களைந்தெறியப்பட வேண்டும்.

அவ்வாறான தலைமைத்துவங்கள் உருவாக வேண்டுமானால் அதனை சிறந்த கல்வி முறையூடாக மட்டுமே சாத்தியமாகும்.

இந்த நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தினால் உயிர்களை இழந்துள்ளோம், உடமைகளை இழந்துள்ளோம், வடக்கு கிழக்கில் ஒரு இலட்சத்து 26 ஆயிரம் குடும்பத்தினை தலைமைதாங்கும் தாய்மார்களை தங்கியுள்ளது.

40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உருவாக்கப்பட்டுள்ளனர், 11 ஆயிரத்திற்கு மேற்பட்ட போராளிகள் என யுத்த வடுக்களை நாங்கள் சுமந்து நிற்கின்றோம்.

இதற்கு காரணம் தன்னைப்போல் பிறரை பார்க்காத நேசிக்காத தன்மை இந்த நாட்டில் இருக்காத காரணமே இந்த நிலை ஏற்பட்டது.

எதிர்வரும் சந்ததியினராவது நல்ல சிந்தனையுடையவர்களாக, ஆரோக்கியமான சிந்தமையுடையவர்களாக அனைவருக்கும் பயன்தரக் கூடியவர்களாக உருவாக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.