ananthi001

குற்றவாளிகளை காப்பாற்றி மார்தட்டும் நல்லாட்சி: சுவீடன் நாட்டு ஊடகவியலாளரிடம் அனந்தி

தமிழர்களை இனவழிப்பு செய்த இலங்கை இராணுவத்தையும், அதற்கு கட்டளைகளை வழங்கி வழி நடத்திய தலைவர்களையும் காப்பாற்றியதே மூன்று ஆண்டுகால சாதனை என நல்லாட்சி அரசாங்கம் மார்தட்டிக்கொள்வதாக வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

ஆகவே இந்த அரசிடம் எமக்கான நீதியை எவ்வாறு எதிர்பார்க்க முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

வடமாகாண மகளிர் விவகார அமைச்சரின் அலுவலகத்திற்கு வருகை தந்திருந்த சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஜொஹான் மைக்கெல்சனிற்கு வழங்கிய விசேட செவ்வியில் இந்த கேள்வியை அனந்தி கேட்டுள்ளார்.

ஆட்சி மாற்றம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிடவில்லை. புனர்வாழ்வு, அபிவிருத்தி என்பது இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட இனவழிப்பு போரினால் ஏற்பட்ட பக்கவிளைவுகளே எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தியை காரணம் காட்டி நிரந்தர தீர்வுக்கான காலம் கடத்தும் திட்டத்தை ஏற்க முடியாது.

இனவழிப்பு போர் எந்த நோக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்டதோ அதனை இப்போதும் நீடிக்கும் விதத்திலேயே இன்றைய அரசின் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மின்சாரக் கதிரை பற்றிய அச்சம், சர்வதேச யுத்தக் குற்ற விசாரணைப் பொறிமுறை மற்றும் சர்வதேச நீதிபதிகளை நாட்டிற்குள் வரவழைத்தல் போன்ற விடயங்கள் நல்லாட்சிக் காலத்தில் முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் தெரிவித்திருந்தார்.

இலங்கை நாட்டின் குடிமக்களான தமிழர்களை கொன்றொழித்ததுடன் அதற்கான பொறுப்புக் கூறலையும் நிராகரித்து வருவதன் மூலம் ஒன்றுபட்ட நாட்டில் சகோதரத்துவத்துடன் வாழ்வோம் என்ற அறைகூவல் வெறும் வார்த்தையே என்பதை நிரூபித்துள்ளார்கள்.

தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பதன் மூலம் சிங்கள மக்களையும் சிங்கள அரசியல்வாதிகளையும் திருப்திப்படுத்தும் போக்கிலேயே இன்றைய நல்லாட்சி அரசும் பயணித்து வருவதனை மைத்திரிபால சிறிசேனவின் மேற்குறித்த அறிவிப்பு துலாம்பரமாக எடுத்துக்காட்டுகின்றது என குற்றம் சுமத்தியுள்ளார்.

நாட்டின் ஆட்சியாளர்களே இவ்வாறு வெளிப்படையாக கூறிவரும் நிலையில் அழித்தொழிக்கப்பட்டு நீதிக்காக போராடிக்கொண்டிருக்கும் எமக்கான நீதியை எவ்வாறு இவர்களிடம் எதிர்பார்க்க முடியும்?

நடைபெற்ற தமிழினப்படுகொலைக்கு பொறுப்புக் கூறும் விடயத்தில், அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அனுசரணை வழங்கிய இணைத்தலைமை நாடுகளும் இன அழிப்பு போருக்கு நேரடி, மறைமுக உதவிகளை வழங்கிய அமெரிக்கா, இந்தியா, ரஸ்யா, சீனா, பாக்கிஸ்தான் உள்ளிட்ட அனைத்து நாடுகளும் கடப்பாடு உடையவர்களாக இருப்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல், பொருளாதார நலன்களை முன்னிறுத்தி இலங்கை அரசாங்கத்தின் ஏமாற்றுத்தனங்களை கண்டுகொள்ளாது இருப்பதானது மென்மேலும் அதே பாதையில் இலங்கை அரசாங்கம் பயணிப்பதற்கான ஏது நிலையையே ஏற்படுத்தும்.

ஆகவே, சர்வதேச நாடுகளும் ஐ.நா மன்றமும் இலங்கை அரசாங்கத்தை பொறுப்புக் கூறலின் வழியே தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்டும் வகையில் தீர்வுகாண அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாக வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் குறிப்பிட்டுள்ளார்.