தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஜனநாயகப் போராளிகள் கட்சியையும் இணைத்துக்கொள்வது பற்றி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது.
அதற்கு கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் இணங்கியுள்ளன என்று தெரியவருகின்றது.
ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் வரதர் அணியை கூட்டமைப்புடன் இணைத்துக்கொள்வது தொடர்பான விடயத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று அறியமுடிகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஆசனப் பங்கீடு தொடர்பில் நேற்றுமுன்தினம் 6 மணிநேரம் பேச்சு நடைபெற்றது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மார்ட்டின் வீதியிலுள்ள தலைமை அலுவலகத்தில் கட்சிகளின் பிரமுகர்கள் நேற்றுமுன்தினம் மாலை 3 மணிக்கு ஒன்றுகூடினர். கலந்துரையாடல் இரவு 9 மணிவரை நீடித்தது.
இந்தக் கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் அந்தக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, செயலர் கி.துரைராஜசிங்கம், வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடக்கு மாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் ஆகியோரும், புளொட் சார்பில் கந்தையா சிவநேசன் (பவான்), ரெலோ சார்பில் கட்சியின் செயலர் ந.சிறிகாந்தா, ஹென்றி மகேந்திரன், இந்திரகுமார் பிரசன்னா, வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம், நித்தியானந்தம், வினோநோதராதலிங்கம், ஜனா (கோவிந்தன் கருணாகரம்), கமல்ராஜ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளைத் தவிர, ஜனநாயகப் போராளிகள் கட்சியையும் இணைத்துக்கொள்வது பற்றி இதன்போது பேசப்பட்டுள்ளது. அதற்கு பங்காளிக் கட்சிகள் இணங்கியுள்ளன என்று தெரியவருகின்றது.
ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் வரதர் அணியை இணைத்துக்கொள்வது தொடர்பான விடயத்தில் இந்தக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று தெரியவருகின்றது.