பந்து இன்னும் தமிழரசுக் கட்சியிடமே! கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் கூட்டத்தில் குழப்பம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையேயான ஆசனப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை குழப்பத்தில் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். மாட்டீன் வீதியிலுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் சுமூகமான முடிவுகள் எதும் எட்டப்படவில்லை என புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் தெரிவித்தார்.

மேலும், “பந்து இன்னும் தமிழரசுக் கட்சியின் கூட்டுக்குள்ளேயே” என ரெலோ கட்சியின் செயலாளர் நா. சிறீகாந்தா தெரிவித்தார்.

எனினும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த தமிழரசுக்கட்சியின் செயலாளரும், கிழக்குமாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான துரைராஜாசிங்கம்,

கூட்டத்தில் குழப்பம் எதும் ஏற்படவில்லை. சுமூகமாகவே பேச்சுவார்த்தை நடைபெற்றது, நாளை மறுதினம் மறுபடியும் கூட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.

இதில் சிறீகாந்தா மற்றும் சித்தார்த்தன் தெரிவித்த கருத்து தொடர்பில் கேள்வி எழுப்பியபோது,

“கட்சியின் கூட்டத்தில் எந்த பிரச்சினைகளும் ஏற்படவில்லை” என தெரிவித்துள்ளார்.