cvk001

32 மில்லியன் ரூபாய்க்கு என்ன நடந்தது? சீ.வி.கே. கேள்வி

வடமாகாண ஆளுநர் நிதியத்திலிருந்து எடுத்து கூட்டுறவு திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட 32 மில்லியன் ரூபாய்க்கு என்ன நடந்தது என கூட்டுறவு அமைச்சர் வெளிப்படுத்த வேண்டும்.

இல்லையேல் 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கூட்டுறவு திணைக்களத்திற்கான ஒதுக்கீட்டினை ஆதரிக்க மாட்டோம் என வடமாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கூறியிருக்கின்றார்.

வடமாகாண சபையின் 111ஆவது அமர்வு இன்று நடைபெற்றது. இதன்போது மேற்படி விடயம் தொடர்பாக கருத்து கூறும்போதே அவைத் தலைவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில்,

மாகாண ஆளுநர் நிதியத்திலிருந்து 144 மில்லியன் ரூபாய் நிதி எடுக்கப்பட்டது.

அந்த நிதியை சில வகைப்பாட்டினருக்கே வழங்கப்பட வேண்டும் என மாகாணசபை நிபந்தனை விதித்திருந்ததுடன், அவர்களுக்கு கொடுப்பதற்கு சபை அங்கீகாரம் வழங்க வேண்டும் எனவும் கூறியிருந்தது.

இதற்கமையவே கூட்டுறவு திணைக்களத்திற்கும் 32 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டது. அவ்வாறு வழங்கப்பட்ட நிதி செலவிடப்பட்டுள்ளதா? செலவிடப்பட்டிருந்தால் மாகாண சபையின் அனுமதி பெறப்பட்டதா?

செலவிடப்படவில்லை என்றால் அது தொடர்பான தகவல்களை அடுத்த அமர்வில் மாகாண கூட்டுறவு அமைச்சர் வெளிப்படுத்த வேண்டும்.

இல்லையேல் 2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் கூட்டுறவு திணைக்களத்திற்கான ஒதுக்கீட்டை ஆதரிக்கமாட்டோம் என்றார்.