ஒற்றுமைக்காக எந்த விட்டுக் கொடுப்புக்கும் தயார்! இரா.சம்பந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமைக்காக எந்த விட்டுக் கொடுப்புக்கும் தயார் என்று பங்காளிக் கட்சித் தலைவர்களிடம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார் என்று அறிய முடிகின்றது.

உள்ளூராட்சித் தேர்தல் ஆசனப் பங்கீடு தொடர்பாக நேற்று முன்தினம் நடந்த சந்திப்புக் குழப்பத்தில் முடிந்தது. அதன் பின்னர் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்வதில்லை என்று ரெலோ அமைப்பு அறிவித்தது.

தமிழ்க் கூட்டமைப்புக்குள் எழுந்துள்ள குழப்ப நிலைமையை அடுத்து அதன் தலைவர் இரா.சம்பந்தன் சமரச முயற்சிகளில் நேரடியாக இறங்கியுள்ளார்.

ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனுடன் அவர் அலைபேசியில் பேசினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இரா.சம்பந்தனின் பிரதிநிதியாக செல்வம் அடைக்கலநாதனைச் சந்தித்தார்.

சந்திப்புத் திருப்திகரமாக அமைந்தது என்று கூறியுள்ள எம்.ஏ.சுமந்திரன், தொடர்ந்து பேச்சு நடத்தப்படும் என்று குறிப்பிட்டார்.

ரெலோ அமைப்பின் செயலாளர் ந.சிறிகாந்தாவுடனும் இரா.சம்பந்தன் அலைபேசி ஊடாகப் பேசியுள்ளார்.

ஆசனப் பங்கீட்டு விவகாரத்தைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம், பேச்சு நடத்தலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பேச்சு நடத்துவதற்குத் தயார் என்று சிறிகாந்தாவும் பதிலளித்துள்ளார்.

புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தனுடனும் அலைபேசி ஊடாக இரா.சம்பந்தன் தொடர்பு கொண்டுள்ளார். நடந்த விவரங்களை கேட்டறிந்து கொண்டுள்ளார்.

பிரச்சினைக்குரிய உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பாகத் தமிழரசுக் கட்சியுடன் பேசுவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

பங்காளிக் கட்சிகளுடன் பேசும்போது ஒன்றுமைக்காக எந்த விட்டுக் கொடுப்புக்கும் தயார். அது தொடர்பில் தமிழரசுக் கட்சிக்கு அறிவுறுத்துவேன் என்று இரா.சம்பந்தன் கூறினார் என்று அறியமுடிகின்றது