ஒரு மதத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் விடயத்துடம் நாம் இணங்கவில்லை!

அரசாங்கத்தின் பாதுகாப்பில் ஒரு சமயம் (மதம்) தப்பிப் பிழைக்குமாக இருந்தால் அது ஒரு உருப்படியான சமயமாக இருக்க முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பில் முதன்மையான சமயம் என ஒன்றைக் குறிப்பிட்டால் ஏனைய சமயங்கள் இரண்டாம் முன்றாம் சமயங்கள் என்ற கருத்து ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அன்புக்கும் நட்புக்குமான வலையமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி, புதிய அரசியலமைப்பு தொடர்பில் இளைஞர் யுவதிகளுக்கு விளக்கம் அளிக்கும் சந்திப்பு நேற்று வவுனியாவில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் பிரதம அதிதிதியாக கலந்துகொண்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், தனது சமயத்திற்கு அரசு பாதுகாப்பு வேண்டும் என தான் ஒருபோதும் கோர மாட்டேன் எனக் குறிப்பிட்டார்.

இருப்பினும் கடந்த நாட்களில் இடம்பெற்ற புதிய அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியிருந்த ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கியுள்ளதாக பலரும் கூறியிருந்தனர்.

இந்த சூழ்நிலையில் புதிய அரசியலமைப்பில் குறிப்பிட்ட ஒரு மதத்திற்கு முன்னுரிமை அளிக்கும் வியடத்துடன் தாம் இணங்கவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.